Saturday, March 3, 2012

திருக்குறள் அதிகாரம் 20



பயனில சொல்லாமை



191 .    பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
            எல்லாரும் எள்ளப் படும்.




கேட்டவர்  பலரும்  வெறுக்கும் படியாகப் பயனில்லாத  சொற்களைச்  சொல்லுகின்றவன்  எல்லோராலும்  இகழப்படுவான்.


192 .    பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
             நட்டார்கள் செய்தலிற் றீது.
    

 பலர் முன்னே பயனில்லாத சொற்களைச் சொல்லுதல் நண்பரிடத்தில் அறம் இல்லாத செயல்களைச் செய்தலை    விடத் தீமையானதாகும் 


193 .    நயனிலன் என்பது சொல்லும்  பயனில
            பாரித் துரைக்கும் உரை.



 ஒருவன் பயனில்லாத பொருள் களைப் பற்றி விரிவாகச்   சொல்லும்  சொற்கள்  அவன் அறம் இல்லாதவன் என்பதை  அறிவிக்கும்

194 .     நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாரப்
             பண்பில்சொல் பல்லா ரகத்து.



பயனோடு பொருந்தாத  பண்பு  இல்லாத சொற்களை  பலரிடத்தும்  சொல்லுதல் அறத்தோடு பொருந்தாமல் நன்மையிலிருந்து நீங்கச் செய்யும்

195 .       சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
               நீர்மை யுடையார் சொலின்



பயனில்லாத  சொற்களை நல்ல பண்பு உடையவர் சொல்லுவரானால் அவருடைய மேன்பாடு அவர்க்குரிய மதிப் போடு   நீங்கி  விடும்.

196 .      பயனில் சொல் பாராட்டு வானை மகன்எனல்
              மக்கட் பதடி யெனல்.


பயனில்லாத   சொற்களை ப  பல முறையும்  சொல்லுகின்ற  ஒருவனை  மனிதன் என்று சொல்லக்கூடாது;  மக்களுள்    பதர் என்று சொல்ல வேண்டும். 


197 .     நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
             பயனில சொல்லாமை நன்று.



அறம் இல்லாதவற்றைச் சொன்னாலும் சொல்லலாம்; சான்றோர்  பயனில்லா  சொற்களைச்  சொல்லாமல் இருத்தல்  நன்மையாகும்

198 .    அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
            பெரும்பயன் இல்லாத சொல்.


அருமையான   பயன்களை ஆராயவல்ல அறிவை உடைய அறிஞர், மிக்க  பயன்  இல்லாத சொற்களை   ஒருபோதும் சொல்ல மாட்டார். 
 
199 .      பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார்  மருள்தீர்ந்த
         மாசறு காட்சி யவர்.


மயக்கத்தில் இருந்து தெளிந்த மாசற்ற அறிவை உடையவர்  பயன் நீங்கிய சொற்களை ஒருகால் மறந்தும் சொல்ல மாட்டார்.

200.     சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
       சொல்லிற் பயனிலாச் சொல்.


சொற்களில் பயனுடைய சொற்களை மட்டுமே சொல்ல வேண்டும்;  பயன் இல்லாதவைகளாகிய சொற்களைச் சொல்லவே  கூடாது.  

No comments:

Post a Comment