Wednesday, July 31, 2013

திருக்குறள் அதிகாரம் 33

கொல்லாமை

321.
அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்.

 அறமாகிய செயல் எது என்றால் ஓர் உயிரையும்
கொல்லாமையாகும்; கொல்லுதல் அறமல்லாத செயல்கள்
எல்லாவற்றையும் விளைக்கும்.

 
 
322.
பகுத்துஉண்டு பல்உயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.


கிடைத்ததைப் பகுத்துக் கொடுத்துத் தானும் உண்டு
பல உயிர்களையும் காப்பாற்றுதல், அறநூலார்  தொகுத்த
அறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும். 

 
323.
ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றுஅதன்
பின்சாரப் பொய்யாமை நன்று.

இணையில்லாத ஓர் அறமாகக் கொல்லாமை நல்லது;
அதற்கு  அடுத்த நிலையில் வைத்து கூறத்தக்கதாகப்
பொய்யாமை நல்லது. 
 
 
324.
நல்ஆறு எனப்படுவது யாதெனின் யாதுஒன்றும்
கொல்லாமை சூழும் நெறி.


நல்ல வழி என்று அறநூல்களால் சொல்லப்படுவது
எது என்றால், எந்த உயிரையும் கொல்லாத அறத்தைப் 
போற்றும் நெறியாகும். 

 
325.
நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை.

வாழ்க்கையின் தன்மையைக் கண்டு அஞ்சித் துறந்
தவர்கள் எல்லாரிலும், கொலை செய்வதற்கு அஞ்சிக்
கொல்லாத அறத்தைப் போற்றுகின்றவன் உயர்ந்தவன்.


326.
கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லாது உயிருண்ணும் கூற்று.


கொல்லாத அறத்தை மேற்கொண்டு நடக்கின்றவ
னுடைய வாழ்நாளின் மேல், உயிரைக்க் கொண்டு செல்லும்
கூற்றவனும் செல்லமாட்டான்.  

 
327..
தன்உயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்உயிர் நீக்கும் வினை.


தன உயிர் உடம்பிலிருந்து நீங்கிப் போவதாக
நேர்ந்தாலும், அதைத் தடுப்பதற்காகத்தான்  தான் வேறோர்
உயிரை  நீக்கும் செயலைச் செய்யக் கூடாது.

 
328.
நன்றுஆகும் ஆக்கம் பெரிதுஎனினும் சான்றோர்க்குக்
கொன்றுஆகும் ஆக்கம் கடை.


கொலையால் நன்மையாக விளையும் ஆக்கம்
பெரிதாக இருந்தாலும், சான்றோர்க்குக் கொலையால்
வரும் ஆக்கம் மிக இழிவானதாகும்.

 
329.
கொலைவினையர் ஆகிய மாக்கள் புலைவினையார்
புன்மை தெரிவார் அகத்து.


கொலைத்தொழிலினராகிய  மக்கள் அதன் இழிவை
ஆராய்ந்தவரிடத்தில் புலைத்தொழிலுடையவராய்த்
தாழ்ந்து தோன்றுவர்.  

 
330.
உயிர்உடம்பின் நீக்கியார் என்ப செயிர்உடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்.

நோய் மிகுந்த  உடம்புடன் வறுமையான தீய வாழ்க்கை
உடையவர், முன்பு கொலை பல செய்து உயிர்களை உடம்புக
ளிலிருந்து நீக்கினவர் என்று அறிஞர் கூறுவர். 

 

Monday, July 29, 2013

திருக்குறள் அதிகாரம் 32

இன்னாசெய்யாமை

311.
சிறப்புஈனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா
செய்யாமை மாசுஅற்றார் கோள்.

சிறப்பைத் தருகின்ற பெருஞ் செல்வத்தைப்
பெறுவதாக   இருந்தாலும், பிறர்க்குத் துன்பம் செய்யா
திருத்தலே மாசற்றவரின் கொள்கையாம்

 
312.
கறுத்துஇன்ன செய்தஅக் கண்ணும் மறுத்துஇன்னா
செய்யாமை மாசுஅற்றார் கோள்.
 
ஒருவன் கறுவுகொண்டு துன்பம் செய்த போதிலும்
அவனுக்குத் திரும்பத் துன்பம் செய்யாதிருத்தலே
மாசற்றவரின் கொள்கையாம்.  


313.
செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமம் தரும்..
 
தான் ஒன்றும் செயாதிருக்கத் தனக்குத் தீங்கு
செய்தவர்க்கும் துன்பமானவற்றைச் செய்தால், செய்த
பிறகு தப்பமுடியாத துன்பத்தையே கொடுக்கும்.


314.
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.
 
தான் ஒன்றும் செயாதிருக்கத் தனக்குத் தீங்கு
செய்தவர்க்கும் துன்பமானவற்றைச் செய்தால், செய்த
பிறகு தப்பமுடியாத துன்பத்தையே கொடுக்கும்.


315.
அறிவினால் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை,.

மற்ற உயிரின் துன்பத்தைத் தன் துன்பம் போல்
கருதி காப்பாற்றாவிட்டால், பெற்றுள்ள அறிவினால் 
ஆகும் பயன் உண்டோ? 
 
 
316.
இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறந்கண் செயல்.
 
ஒருவன் துன்பமானவை என்று தன் வாழ்க்கையில்
கண்டு உணர்ந்தவைகளை மற்றவனிடத்தில் செய்யாமல்
தவிர்க்க வேண்டும்.


317.
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தான்ஆம்
மாணாசெய் யாமை தலை.

எவ்வளவு சிறியதாயினும் எக்காலத்திலும்
எவரிடத்திலும் மனத்தால் எண்ணி உண்டாகின்ற
துன்பச் செயல்களைச் செய்யாதிருத்தலே சிறந்தது.
 

318.
தன்உயிர்க்கு இன்னாமை தான்அறிவான் எந்கொலோ
மன்னுயிர்க்கு இன்னா செயல்.
 
தன் உயிர்க்குத் துன்பமானவை இவை என்று
உணர்ந்தவன், மற்ற உயிர்களுக்கு அத் துன்பங்களைச்
செய்தல் என்ன காரணத்தாலோ?
 

319,
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும்.
 
முற்பகலில்   மற்றவர்க்குத் துன்பமானவற்றைச்
செய்தால் அவ்வாறு செய்தவர்க்கே பிற்பகலில்
துன்பங்கள் தாமாகவே வந்து சேரும்.


320.
நோய்எல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோசெய்யார்
நோய்இன்மை வேண்டு பவர்.

துன்பம் எல்லாம் துன்பம் செய்தவரையே சார்வன;
ஆகையால் துன்பம் இல்லாமல் வாழ்வதை விரும்பு
கின்றவர், பிறர்க்கே துன்பம் செய்யார்.


Saturday, July 27, 2013

திருக்குறள் அதிகாரம் 31

வெகுளாமை

301.
செல்லிடத்துக் காப்பான் சினம்காப்பான் அல்லிடத்துக்
காக்கின்என் காவாக்கால் என்.

பலிக்கும் இடத்தில் சினம் வராமல் காப்பவனே சினம்
காப்பவன்; பலிக்காத இடத்தில் காத்தால் என்ன?
காக்கா விட்டால் என்ன?

302.
செல்லா இடத்துச் சினம்தீது செல்லிடத்தும்
இல்அதனில் தீய பிற.

பலிக்காத இடத்தில் (தன்னைவிட வலியவரிடத்தில்)
சினம் கொள்வது தீங்கு; பலிக்கும் இடத்திலும் (மெலியவ
ரிடத்திலும்) சினத்தைவிடத் தீயவை வேறு இல்லை.

 
303.
மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும்.
 
யாரிடத்திலும் சினங் கொள்ளாமல் அதை மறந்துவிட
வேண்டும்; தீமையான விளைவுகள் அந்தச்
சினத்தாலாயே ஏற்படும். 


304.
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற.
 
முகமகிழ்ச்சியையும்  அகமகிழ்ச்சியையும் கொல்கின்ற
சினத்தைவிட ஒருவனுக்கு பகையானவை வேறு
உள்ளனவோ? 


305.
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்.
 
ஒருவன் தன்னைத் தான்  காத்துக் கொள்வதானால்,
சினம் வராமல் காத்துக் கொள்ள வேண்டும்;
காக்கா விட்டால், சினம் தன்னையே அழித்துவிடும். 


306.
சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும்
ஏமப் புணையைச் சுடும்.
 
சினம் என்று சேர்ந்தவரை அழிக்கும் நெருப்பு,
ஒருவனுக்கு இனம் என்னும் இன்பத் தெப்பத்தையும்
சுட்டழிக்கும்.


307.
சினத்தைப் பொருள்என்று கொண்டவன் கேடு
நிலத்துஅறைந்தான் கைபிழையா தற்று.

(தன வல்லமை புலப்படுத்தச்) சினத்தைப்
பொருளென்று கொண்டவன் அழிதல், நிலத்தை
அறைந்தவனுடைய கை தப்பாததுபோல் ஆகும். 

308,
இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை  நன்று.
 
பல சுடர்களை உள்ள பெருநெருப்பில் தோய்வது
போன்ற துன்பத்தை ஒருவன் செய்தபோதிலும், கூடுமா
னால் அவன் மேல் சினங் கொள்ளாதிருத்தல் ஆகும்.


309.
உள்ளிய எல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின்.
 
ஒருவன்  தன் மனத்தால் சினத்தை எண்ணா
திருப்பானானால், நினைத்த நன்மைகளை எல்லாம்
அவன் ஒருங்கே பெறுவான்.


310.
இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை.

சினத்தில் அளவு கடந்து சென்றவர் இறந்தவரைப்
போன்றவர்; சினத்தை அடியோடு துறந்தவர் துறந்தவர்க்கு ஒப்பாவார்.

Friday, July 26, 2013

திருக்குறள் அதிகாரம் 30

வாய்மை

291.
வாய்மை எனப்படவது யாதெனின் யாதொன்றும்
தீமை  இலாத சொலல்.
 
வாய்மை என்று கூறப்படுவது எது என்றால், அது
மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீமை இல்லாத சொற்களைச்
சொல்லுதல் ஆகும்.
 
 
292.
பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.


குற்றம் தீர்ந்த நன்மையை விளைக்குமானால்
பொய்யான சொற்களும் வாய்மை என்று கருதத்தக்க
இடத்தைப் பெறுவனவாம்.
 
 
293.
தன்நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.

ஒருவன் தன் நெஞ்சம் அறிவதாகிய ஒன்றைக்
குறித்துப் பொய் சொல்லக் கூடாது. பொய் சொன்னால்  
அதைக் குறித்துத் தன் நெஞ்சமே தன்னை வருத்தும்.
 

294.
உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள்ளெல்லாம் உளன்.
 
ஒருவன் தன் உள்ளம் அறியப் பொய் இல்லாமல்
நடப்பானானால், அத்தகையவன் உலகத்தாரின்
உள்ளங்களில் எல்லாம் இருப்பவனாவான்.


295.
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை.

ஒருவன் தன் மனத்தோடு பொருந்த உண்மை
பேசுவானானால், அவன் தவத்தோடு  தானமும் ஒருங்கே
செய்வாரைவிடச் சிறந்தவன்.  

296.
பொய்யாமை அன்ன புகழ்இல்லை ஏய்யாமை
எல்லா அறமும்  தரும்.
 
ஒருவனுக்குப் பொய் இல்லாமல் வாழ்தலைப் போன்ற
புகழ்நிலை வேறொன்றும் இல்லை; அஃது  அவன்
அறியாமலே  அவனுக்கு எல்லா அறமும் கொடுக்கும்.


297.
பௌய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று.
 
பொய்யாமை ஆகிய அறத்தை உண்மையாகவே
போற்றி வாழ முடிந்தால் மற்ற அறங்களைச் செய்தலும்
நல்லது ஆகும்.



298.
புறத்தூய்மை நீரான் அமையும் அகம்தூய்மை
வாய்மையான் காணப் படும்.
 
புறத்தே தூய்மையாக விளங்குதல் நீரினால்
ஏற்படும்; அதுபோல,  அகத்தே தூய்மையாக விளங்குதல் 
வாய்மையால் உண்டாகும். 


299.
எல்லா விளக்கும் விளக்குஅல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கெ விளக்கு..
 
(புறத்தில் உள்ள இருளை நீக்கும்)  விளக்குகள் எல்லாம்
 விளக்குகள் அல்ல; சான்றோர்க்கு (அகத்து இருள் நீக்கும்)
 பொய்யாமையாகிய விளக்கே விளக்கு ஆகும்.  


300.
யாமெய்யாக் கண்டவுற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற.

யாம் உண்மையாகக் கண்ட பொருள்களுள்,
வாய்மையை விட எத்தன்மையாலும் சிறந்தவைளாகச்
சொல்லத் தக்கவை வேறு இல்லை.

Tuesday, July 23, 2013

திருக்குறள் அதிகாரம் 29


கள்ளாமை

281.
எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்து ஒன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு.

பிறரால் இகழப்படாமல் வாழ விரும்புகின்றவன்,
எத்தன்மையான பொருளையும் பிறரிடமிருந்து வஞ்சித்துக்
கொள்ள எண்ணாதபடி தன் நெஞ்சைக் காக்க வேண்டும்.


282.
உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்.

குற்றமனத்தை உள்ளத்தால் எண்ணுவதும் குற்றமே; அத
னால் பிறன் பொருளை அவன் அறியாத வகையால், 'வஞ்சித்துக்
கொள்வோம்' என்று எண்ணாதிருக்க வேண்டும்.


 
283.
களவினால் ஆகிய ஆக்கம் அளவுஇறந்து
ஆவது போலக் கெடும்.

களவு செய்து பொருள் கொள்வதால் உண்டாகிய
ஆக்கம் பெருகுவதுபோல் தோன்றி, இயல்பாக இருக்க
வேண்டிய அளவையும் கடந்து கெட்டுவிடும்.
 


284.
களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா.விழுமம் தரும்.

களவுசெய்து பிறர்பொருள் கொள்ளுதலில் ஒருவ
னுக்கு உள்ள மிகுந்த விருப்பம், பயன் விளையும்போது
தொலை யாத துன்பத்தைத் தரும்.   

 
285.
அருள்கருதி அன்புடையர் ஆதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.

அருளைப் பெரிதாகக் கருதி அன்பு உடையவராய்
நடத்தல், பிறருடைய பொருளைக் கவர எண்ணி அவர்
சோர்ந்திருக்கும் நிலையைப் பார்ப்பவரிடத்தில் இல்லை.


 
286.
அளவின்கண் நின்றுஒழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர்.

களவு செய்து பிறர்பொருள்  கொள்ளுதலில் மிக்க
விருப்பம் உடையவர், அளவு அறிந்து வாழ்தலாகிய
ஆற்றலை விரும்பினவரித்தில் இல்லை.


 
287.
களவுஎன்னும் கார்அறிவு ஆண்மை அளவுஎன்னும்
ஆற்றல் புரிந்தார்கண் இல்.

களவு என்பதற்குக் காரணமான மயங்கிய அறிவு
உடையவாராயிருத்தல், அளவு அறிந்து வாழ்தலாகிய
ஆற்றலை விரும்பினவரித்தில் இல்லை.


 
288.
அளவுஅறிந்தார் நெஞ்சத்து அறம்போல நிற்கும்
களவுஅறிந்தார் நெஞ்சில் கரவு.

அளவறிந்து வாழ்கின்றவரின் நெஞ்சில் நிற்கும்
அறம் போல், களவுசெய்து பழகி அறிந்தவரின் நெஞ்சில்
வஞ்சம் நிற்கும்.

 
289.
அலவுஅல்ல செய்தாங்கே வீவர் களவுஅல்ல
மற்றைய தேற்றா தவர்.

களவு செய்தல் தவிர மற்ற நல்லவழிகளை நம்பித்
தெளியாதவர், அளவு அல்லாத செயல்களைச் செய்து
அப்போதே கெட்டழிவர்.


 
290.
கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்
தள்ளாது புத்தேள் உலகு.

களவு செய்வார்க்கு உடலில் உயிர் வாழும் வாழ்வும்
தவறிப்போகும். களவு செய்யாமல் வாழ்வோர்க்குத்
தேவருலகும் வாய்க்கத் தவறாது.



திருக்குறள் அதிகாரம் 28


கூடாவொழக்கம்(கூடா ஒழுக்கம்)
 



271.
வஞ்ச மனத்தான் படிற்றுஒழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்.

வஞ்ச மனம் உடையவனது பொய்யொழுக்கத்தை
அவனுடைய உடம்பில் கலந்துநிற்கும் ஐந்து பூதங்களும்
கண்டு தம்முள் சிரிக்கும்.

272.
வான்உயர் தோற்றம் எவன்செய்யும் தன்நஞ்சம்
தான்அறி குற்றப் படின்.

தன் மனம் தான் அறிந்த குற்றத்தில் தங்குமானால்
வானத்தைப் போல் உயர்ந்துள்ள தவக்கோலம்,
ஒருவனுக்கு என்ன பயன் செய்யும்?


 
273.
வலிஇல் நிலைமையான் வல்உருவம் பெற்றம்
புலியின் தோல் போர்த்துமேய்ந் தற்று.

மனத்தை அடக்கும் வல்லமை இல்லாதவன் மேற்
கொண்ட வலிய தவக்கோலம், பசு புலியின் தோலைப்
போர்த்திக்கொண்டு பயிரை மேய்ந்தாற் போன்றது.


274.
தவம்மறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள் சிமிழ்த் தற்று.

தவக்கோலத்தில் மறைந்து கொண்டு தவம் அல்லாத
தீய செயல்களைச் செய்தல், புதரில் மறைந்து வேடன்
பறவைகளை வலை வீசிப் பிடித்தலைப் போன்றது.  


275.
பற்றுஅற்றேம் என்பார் படிற்றுஒழுக்கம் எற்றுஎற்றுஎன்று
ஏதம் பலவும் தரும்.
 
'பற்றுக்களைத் துறந்தோம்' என்று சொல்கின்றவரின்
பொய்யொழுக்கம்   'என்ன செய்தோம் என்ன செய்தோம்'
என்று வருந்தும்படியான துன்பம் பலவும் தரும்.  


276.
நெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல்.
 
மனத்தில் பற்றுக்களைத் துறக்காமல், துறந்தவரைப்
போல் வஞ்சனை செய்து வாழ்கின்றவரைப் போல்
இரக்கமற்றவர் வேறு எவரும் இல்லை.

277.
புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி
மூக்கிற் கரியார் உடைத்து.

புறத்தில் குன்றிமநிபோல் செம்மையானவராய்க்
காணப்பட்டாராயினும், அகத்தில் அகத்தில் குன்றிமணியின்
மூக்குப்போல் கருத்திருப்பவர் உலகில் உண்டு. 


278.
மனத்தது மாசுஆக மாண்பார்நீர் ஆடி
மறைந்துஒழுகு மாந்தர் பலர்.

மனத்தில் மாசு இருக்கத் தவத்தால் மாண்பு
பெற்றவரைப்போல் நீரில் மூழ்கி மறைந்து நடக்கும்
வஞ்சனை உடைய மாந்தர் உலகில் பலர் உள்ளனர்.


279.
ணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங்கு அன்ன
வினைபடு பாலால் கொளல்.

நேராகத் தோன்றினும் அம்பு கொடியது; வளைவுடன்
தோன்றினாலும் யாழின் கொம்பு நன்மையானது; மக்களின்
பண்புகளையும் செயல்வகையால் உணர்ந்து கொள்ள வேண்டும்.  


280.
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்.

உலகம் பழிக்கும் தீயொழுக்கத்தை விட்டுவிட்டால்,
மொட்டை அடித்தாலும் சடைவளர்த்தலுமாகிய புறக்
கோலங்களும் வேண்டாம்.


திருக்குறள் அதிகாரம் 27

தவம்

261.
உற்றநோய் நோன்றல் உயிர்க்குஉறுகண் செய்யாமை
அற்றே தவத்திற்கு உரு.

தனக்கு உற்ற துன்பத்தைப் பொறுத்தலும், மற்ற
உயிர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலும் ஆகிய
அவ்வளவே தவத்திற்கு வடிவமாகும்.


262.
தவமும் தவம்உடையார்க்கு ஆகும் அவம் அதனை
அஃதுஇலார் மேற்கொள் வது.

தவக்கோலம்   தவஒழுக்கம் உடையவர்க்கே பொருந்துவதாகும்;
அக் கோலத்தைத் தவஒழுக்கம் இல்லாதவர்
மேற்கொள்ளுவது வீண் முயற்சியாகும்.  


263.
துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
மற்றை யவர்கள் தவம்.

துறந்தவர்க்கு உணவு முதலியவை கொடுத்து உதவ
வேண்டும் என விரும்பி மற்றவர்கள் (இல்லறத்தினர்)
தவம்   செய்தலை மறந்தார்களோ? 


264.
ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்னின் தவத்தால் வரும்.

தீமை செய்யும் பகைவரை அடக்குதலும், நன்மை
செய்யும் நண்பரை உயர்த்துதலும் நினைத்த அளவில்
தவத்தின் வலிமையால் உண்டாகும்.
265.
வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப்படும்.

விரும்பிய பயன்களை விரும்பியவாறே அடைய
முடியுமாகையால் செய்யத்தக்க தவம் இந்நிலையிலும்
(இல்லற வாழ்க்கையிலும்) முயன்று செய்யப்படும்.


266.
தவம்செய்வார் தம்கருமம் செய்வார்மற்று அல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு.

தவம் செய்கின்றவரே தமக்குரிய கடமையைச் செய்
கின்றவர் ஆவர்; அவர் அல்லாத மற்றவர் ஆசை
வலையில் அகப்பட்டு வீண் முயற்சி செய்கின்றவரே.  


267.
சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.

புடமிட்டுச் சுடச்சுட ஒளிவிடுகின்ற பொன்னைப்
போல், தவம் செய்கின்றவரைத் துன்பம் வருத்த  வருத்த
மெய்யுணர்வு மிகும்.   
268.
தன்உயிர்தான்அறப் பெற்றானை ஏனைய
மன்னுயிர் எல்லாம் தொழும்.

தவவலிமையால்    தன்னுடைய   உயிர் தான் என்னும்
பற்று நீங்கப் பெற்றவனை மற்ற உயிர்கள் எல்லாம்
(அவனுடைய பெருமையை உணர்ந்து) தொழும். 

 
269.
கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட்ட வர்க்கு.

தவம் செய்வதால் பெறத்தக்க ஆற்றலைப்
பெற்றவர்க்கு (ஓர் இடையூறும் இல்லையாகையால்)
யமனை வெல்லுதலும் கைகூடும்.

 
270.
இலர்பலர் ஆகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்.

ஆற்றல் இல்லாதவர் பலராக உலகில் இருப்பதற்குக்
காரணம், தவம் செய்கின்றவர் சிலராகவும் செய்யாதவர்
பலராகவும் இருப்பதே காரணம்.