Tuesday, July 23, 2013

திருக்குறள் அதிகாரம் 29


கள்ளாமை

281.
எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்து ஒன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு.

பிறரால் இகழப்படாமல் வாழ விரும்புகின்றவன்,
எத்தன்மையான பொருளையும் பிறரிடமிருந்து வஞ்சித்துக்
கொள்ள எண்ணாதபடி தன் நெஞ்சைக் காக்க வேண்டும்.


282.
உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்.

குற்றமனத்தை உள்ளத்தால் எண்ணுவதும் குற்றமே; அத
னால் பிறன் பொருளை அவன் அறியாத வகையால், 'வஞ்சித்துக்
கொள்வோம்' என்று எண்ணாதிருக்க வேண்டும்.


 
283.
களவினால் ஆகிய ஆக்கம் அளவுஇறந்து
ஆவது போலக் கெடும்.

களவு செய்து பொருள் கொள்வதால் உண்டாகிய
ஆக்கம் பெருகுவதுபோல் தோன்றி, இயல்பாக இருக்க
வேண்டிய அளவையும் கடந்து கெட்டுவிடும்.
 


284.
களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா.விழுமம் தரும்.

களவுசெய்து பிறர்பொருள் கொள்ளுதலில் ஒருவ
னுக்கு உள்ள மிகுந்த விருப்பம், பயன் விளையும்போது
தொலை யாத துன்பத்தைத் தரும்.   

 
285.
அருள்கருதி அன்புடையர் ஆதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.

அருளைப் பெரிதாகக் கருதி அன்பு உடையவராய்
நடத்தல், பிறருடைய பொருளைக் கவர எண்ணி அவர்
சோர்ந்திருக்கும் நிலையைப் பார்ப்பவரிடத்தில் இல்லை.


 
286.
அளவின்கண் நின்றுஒழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர்.

களவு செய்து பிறர்பொருள்  கொள்ளுதலில் மிக்க
விருப்பம் உடையவர், அளவு அறிந்து வாழ்தலாகிய
ஆற்றலை விரும்பினவரித்தில் இல்லை.


 
287.
களவுஎன்னும் கார்அறிவு ஆண்மை அளவுஎன்னும்
ஆற்றல் புரிந்தார்கண் இல்.

களவு என்பதற்குக் காரணமான மயங்கிய அறிவு
உடையவாராயிருத்தல், அளவு அறிந்து வாழ்தலாகிய
ஆற்றலை விரும்பினவரித்தில் இல்லை.


 
288.
அளவுஅறிந்தார் நெஞ்சத்து அறம்போல நிற்கும்
களவுஅறிந்தார் நெஞ்சில் கரவு.

அளவறிந்து வாழ்கின்றவரின் நெஞ்சில் நிற்கும்
அறம் போல், களவுசெய்து பழகி அறிந்தவரின் நெஞ்சில்
வஞ்சம் நிற்கும்.

 
289.
அலவுஅல்ல செய்தாங்கே வீவர் களவுஅல்ல
மற்றைய தேற்றா தவர்.

களவு செய்தல் தவிர மற்ற நல்லவழிகளை நம்பித்
தெளியாதவர், அளவு அல்லாத செயல்களைச் செய்து
அப்போதே கெட்டழிவர்.


 
290.
கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்
தள்ளாது புத்தேள் உலகு.

களவு செய்வார்க்கு உடலில் உயிர் வாழும் வாழ்வும்
தவறிப்போகும். களவு செய்யாமல் வாழ்வோர்க்குத்
தேவருலகும் வாய்க்கத் தவறாது.



No comments:

Post a Comment