Tuesday, July 23, 2013

திருக்குறள் அதிகாரம் 27

தவம்

261.
உற்றநோய் நோன்றல் உயிர்க்குஉறுகண் செய்யாமை
அற்றே தவத்திற்கு உரு.

தனக்கு உற்ற துன்பத்தைப் பொறுத்தலும், மற்ற
உயிர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலும் ஆகிய
அவ்வளவே தவத்திற்கு வடிவமாகும்.


262.
தவமும் தவம்உடையார்க்கு ஆகும் அவம் அதனை
அஃதுஇலார் மேற்கொள் வது.

தவக்கோலம்   தவஒழுக்கம் உடையவர்க்கே பொருந்துவதாகும்;
அக் கோலத்தைத் தவஒழுக்கம் இல்லாதவர்
மேற்கொள்ளுவது வீண் முயற்சியாகும்.  


263.
துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
மற்றை யவர்கள் தவம்.

துறந்தவர்க்கு உணவு முதலியவை கொடுத்து உதவ
வேண்டும் என விரும்பி மற்றவர்கள் (இல்லறத்தினர்)
தவம்   செய்தலை மறந்தார்களோ? 


264.
ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்னின் தவத்தால் வரும்.

தீமை செய்யும் பகைவரை அடக்குதலும், நன்மை
செய்யும் நண்பரை உயர்த்துதலும் நினைத்த அளவில்
தவத்தின் வலிமையால் உண்டாகும்.
265.
வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப்படும்.

விரும்பிய பயன்களை விரும்பியவாறே அடைய
முடியுமாகையால் செய்யத்தக்க தவம் இந்நிலையிலும்
(இல்லற வாழ்க்கையிலும்) முயன்று செய்யப்படும்.


266.
தவம்செய்வார் தம்கருமம் செய்வார்மற்று அல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு.

தவம் செய்கின்றவரே தமக்குரிய கடமையைச் செய்
கின்றவர் ஆவர்; அவர் அல்லாத மற்றவர் ஆசை
வலையில் அகப்பட்டு வீண் முயற்சி செய்கின்றவரே.  


267.
சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.

புடமிட்டுச் சுடச்சுட ஒளிவிடுகின்ற பொன்னைப்
போல், தவம் செய்கின்றவரைத் துன்பம் வருத்த  வருத்த
மெய்யுணர்வு மிகும்.   
268.
தன்உயிர்தான்அறப் பெற்றானை ஏனைய
மன்னுயிர் எல்லாம் தொழும்.

தவவலிமையால்    தன்னுடைய   உயிர் தான் என்னும்
பற்று நீங்கப் பெற்றவனை மற்ற உயிர்கள் எல்லாம்
(அவனுடைய பெருமையை உணர்ந்து) தொழும். 

 
269.
கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட்ட வர்க்கு.

தவம் செய்வதால் பெறத்தக்க ஆற்றலைப்
பெற்றவர்க்கு (ஓர் இடையூறும் இல்லையாகையால்)
யமனை வெல்லுதலும் கைகூடும்.

 
270.
இலர்பலர் ஆகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்.

ஆற்றல் இல்லாதவர் பலராக உலகில் இருப்பதற்குக்
காரணம், தவம் செய்கின்றவர் சிலராகவும் செய்யாதவர்
பலராகவும் இருப்பதே காரணம். 


No comments:

Post a Comment