Tuesday, April 22, 2014

திருக்குறள் அதிகாரம் 35

துறவு
341 . 

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்


ஒருவன் எந்தப் பொருளிலிருந்து, எந்தப் பொருளிலிருந்து  பற்று நீங்கியவனாக இருக்கிறானோ, அந்தந்தப்  பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை.

342 . 

வேண்டின் உண்டாகத் துறக்க துறந்தபின் 
ஈண்டுஇயற் பால பல.


துனபமில்லாத நிலைமை வேண்டுமானால்,  எல்லாப் பொருள்களும்   உள்ள காலத்திலேயே துறக்கவேண்டும்; துறந்தபின்  இங்குப் பெறக்கூடும் இன்பங்கள் பல.

343 .
 
அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய எல்லாம் ஒருங்கு.



ஐம்பொறிகளுக்கு உரிய ஐந்து புலன்களின் ஆசையையும்  வெல்லுதல் வேண்டும்.  அவற்றிற்கு வேண்டிய பொருள்களை  எல்லாம் ஒரு சேர விட வேண்டும்.

344 . 

இயல்புஆகும் நோன்பிற்குஒன்று இன்மை உடைமை
மயல்ஆகும் மற்றும் பெயர்த்து.


தவம் செய்வதற்கு ஒரு பற்றும் இல்லாதிருத்தல் இயல்பாகும்;   பற்று  உடையவராக இருத்தல் மீண்டும் மயங்குவதற்கு  வழியாகும்.  

345 . 

மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பு அறுக்கும் 
உற்றார்க்கு உடம்பும் மிகை.


பிறவித் துன்பத்தைப் போக்க முயல்கின்றவர்க்குஉடம்பும்  மிகையான  பொருள்; ஆகையால் அதற்கு மேல் வேறு  தொடர்பு கொள்வது ஏனோ? 
346 . 

யான் எனது என்னுஞ் செருக்குஅறுப்பான் வானோர்க்கு 
உயர்ந்த உலகம் புகும்.



உடம்பை யான் எனக் கருதலும் தொடர்பு இல்லாத  பொருளை   எனது  எனக் கருதலுமாகிய மயக்கத்தைப் போக்கு கின்றவன்,  தேவர்க்கும்  எட்டாத  உயர்ந்த நிலை அடைவான். 

347 . 

பற்றி விடாது இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு.



யான் எனது என்னும் இருவகைப் பற்றுகளையும் பற்றிக் கொண்டு   விடாதவரை,  துன்பங்களும் விடாமல் பற்றிக்  கொள்கின்றன.  
348 . 

தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி 
வலைப்பட்டார் மற்ரை யவர்.


முற்றத் துறந்தவரே உயர்ந்த நிலையினர் ஆவர்;  அவ்வாறு  துறக்காத  மற்றவர், அறியாமையாகிய வலையில்  அகப்பட்டவர் ஆவர்.

349 . 

பற்றுஅற்ற கண்ணே பிறப்புஅறுக்கும் மற்று 
நிலையாமை காணப்படும்.


இருவகைப் பற்றும் அற்றபொழுதே  அந்நிலை பிறவித்துன்பத்தை  ஒழிக்கும்;  இல்லையானால் (பிறவித்துன்பம்  மாறி மாறி வந்து) நிலையாமை  காணப்படும். 

350 . 

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்ரைப் 
பற்றுக பற்று விடற்கு.


பற்றில்லாதவனாகிய  கடவுளுடைய  பற்றைமட்டும் பற்றிக்கொள்ள வேண்டும்; உள்ள பற்றுக்களை விட்டொழிப்பதற்கே அப்பற்றைப்  பற்ற வேண்டும்

Wednesday, July 31, 2013

திருக்குறள் அதிகாரம் 33

கொல்லாமை

321.
அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்.

 அறமாகிய செயல் எது என்றால் ஓர் உயிரையும்
கொல்லாமையாகும்; கொல்லுதல் அறமல்லாத செயல்கள்
எல்லாவற்றையும் விளைக்கும்.

 
 
322.
பகுத்துஉண்டு பல்உயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.


கிடைத்ததைப் பகுத்துக் கொடுத்துத் தானும் உண்டு
பல உயிர்களையும் காப்பாற்றுதல், அறநூலார்  தொகுத்த
அறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும். 

 
323.
ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றுஅதன்
பின்சாரப் பொய்யாமை நன்று.

இணையில்லாத ஓர் அறமாகக் கொல்லாமை நல்லது;
அதற்கு  அடுத்த நிலையில் வைத்து கூறத்தக்கதாகப்
பொய்யாமை நல்லது. 
 
 
324.
நல்ஆறு எனப்படுவது யாதெனின் யாதுஒன்றும்
கொல்லாமை சூழும் நெறி.


நல்ல வழி என்று அறநூல்களால் சொல்லப்படுவது
எது என்றால், எந்த உயிரையும் கொல்லாத அறத்தைப் 
போற்றும் நெறியாகும். 

 
325.
நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை.

வாழ்க்கையின் தன்மையைக் கண்டு அஞ்சித் துறந்
தவர்கள் எல்லாரிலும், கொலை செய்வதற்கு அஞ்சிக்
கொல்லாத அறத்தைப் போற்றுகின்றவன் உயர்ந்தவன்.


326.
கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லாது உயிருண்ணும் கூற்று.


கொல்லாத அறத்தை மேற்கொண்டு நடக்கின்றவ
னுடைய வாழ்நாளின் மேல், உயிரைக்க் கொண்டு செல்லும்
கூற்றவனும் செல்லமாட்டான்.  

 
327..
தன்உயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்உயிர் நீக்கும் வினை.


தன உயிர் உடம்பிலிருந்து நீங்கிப் போவதாக
நேர்ந்தாலும், அதைத் தடுப்பதற்காகத்தான்  தான் வேறோர்
உயிரை  நீக்கும் செயலைச் செய்யக் கூடாது.

 
328.
நன்றுஆகும் ஆக்கம் பெரிதுஎனினும் சான்றோர்க்குக்
கொன்றுஆகும் ஆக்கம் கடை.


கொலையால் நன்மையாக விளையும் ஆக்கம்
பெரிதாக இருந்தாலும், சான்றோர்க்குக் கொலையால்
வரும் ஆக்கம் மிக இழிவானதாகும்.

 
329.
கொலைவினையர் ஆகிய மாக்கள் புலைவினையார்
புன்மை தெரிவார் அகத்து.


கொலைத்தொழிலினராகிய  மக்கள் அதன் இழிவை
ஆராய்ந்தவரிடத்தில் புலைத்தொழிலுடையவராய்த்
தாழ்ந்து தோன்றுவர்.  

 
330.
உயிர்உடம்பின் நீக்கியார் என்ப செயிர்உடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்.

நோய் மிகுந்த  உடம்புடன் வறுமையான தீய வாழ்க்கை
உடையவர், முன்பு கொலை பல செய்து உயிர்களை உடம்புக
ளிலிருந்து நீக்கினவர் என்று அறிஞர் கூறுவர். 

 

Monday, July 29, 2013

திருக்குறள் அதிகாரம் 32

இன்னாசெய்யாமை

311.
சிறப்புஈனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா
செய்யாமை மாசுஅற்றார் கோள்.

சிறப்பைத் தருகின்ற பெருஞ் செல்வத்தைப்
பெறுவதாக   இருந்தாலும், பிறர்க்குத் துன்பம் செய்யா
திருத்தலே மாசற்றவரின் கொள்கையாம்

 
312.
கறுத்துஇன்ன செய்தஅக் கண்ணும் மறுத்துஇன்னா
செய்யாமை மாசுஅற்றார் கோள்.
 
ஒருவன் கறுவுகொண்டு துன்பம் செய்த போதிலும்
அவனுக்குத் திரும்பத் துன்பம் செய்யாதிருத்தலே
மாசற்றவரின் கொள்கையாம்.  


313.
செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமம் தரும்..
 
தான் ஒன்றும் செயாதிருக்கத் தனக்குத் தீங்கு
செய்தவர்க்கும் துன்பமானவற்றைச் செய்தால், செய்த
பிறகு தப்பமுடியாத துன்பத்தையே கொடுக்கும்.


314.
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.
 
தான் ஒன்றும் செயாதிருக்கத் தனக்குத் தீங்கு
செய்தவர்க்கும் துன்பமானவற்றைச் செய்தால், செய்த
பிறகு தப்பமுடியாத துன்பத்தையே கொடுக்கும்.


315.
அறிவினால் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை,.

மற்ற உயிரின் துன்பத்தைத் தன் துன்பம் போல்
கருதி காப்பாற்றாவிட்டால், பெற்றுள்ள அறிவினால் 
ஆகும் பயன் உண்டோ? 
 
 
316.
இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறந்கண் செயல்.
 
ஒருவன் துன்பமானவை என்று தன் வாழ்க்கையில்
கண்டு உணர்ந்தவைகளை மற்றவனிடத்தில் செய்யாமல்
தவிர்க்க வேண்டும்.


317.
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தான்ஆம்
மாணாசெய் யாமை தலை.

எவ்வளவு சிறியதாயினும் எக்காலத்திலும்
எவரிடத்திலும் மனத்தால் எண்ணி உண்டாகின்ற
துன்பச் செயல்களைச் செய்யாதிருத்தலே சிறந்தது.
 

318.
தன்உயிர்க்கு இன்னாமை தான்அறிவான் எந்கொலோ
மன்னுயிர்க்கு இன்னா செயல்.
 
தன் உயிர்க்குத் துன்பமானவை இவை என்று
உணர்ந்தவன், மற்ற உயிர்களுக்கு அத் துன்பங்களைச்
செய்தல் என்ன காரணத்தாலோ?
 

319,
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும்.
 
முற்பகலில்   மற்றவர்க்குத் துன்பமானவற்றைச்
செய்தால் அவ்வாறு செய்தவர்க்கே பிற்பகலில்
துன்பங்கள் தாமாகவே வந்து சேரும்.


320.
நோய்எல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோசெய்யார்
நோய்இன்மை வேண்டு பவர்.

துன்பம் எல்லாம் துன்பம் செய்தவரையே சார்வன;
ஆகையால் துன்பம் இல்லாமல் வாழ்வதை விரும்பு
கின்றவர், பிறர்க்கே துன்பம் செய்யார்.