Tuesday, January 25, 2011

திருக்குறள் அதிகாரம் 14

ஒழுக்கம் உடைமை  



131 .     ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
             உயிரினும் ஒம்பப் படும்

ஒழுக்கமே எல்லோருக்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால்  அந்த   ஒழுக்கமே உயிரை விடச் சிறந்ததாக   போற்றப்படும்            


132       பரிந்து ஒம்பிக் காக்க     ஒழுக்கம் தெரிந்து  ஒம்பித்
             தேரினும்  அதே  துணை  


ஒழுக்கத்தை வருந்தியும்  போற்றிக் காக்க வேண்டும்  பலவற்றையும்  ஆராய்ந்து  போற்றித் தெளிந்தாலும் அந்த  ஒழுக்கமே வாழ்கையில்  துணையாக  விளங்கும்

      
133 .   ஒழுக்கம் உடமை குடிமை இழுக்கம்
            இழிந்த பிறப்பாய் விடும்


ஒழுக்கம் உடையவராக  வாழ்வதே  உயர்ந்த  குடிப் பிறப்பின்  தன்மையாகும்.  ஒழுக்கம் தவறுதல்  இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகி  விடும்.


134 .     மறப்பின் ஒத்துக் கொளலாகும்  பார்ப்பான் 
             பிறப்பொழுக்கம் குன்றக் கெடும் 

 கற்ற மறைபொருளை  மறந்தாலும்  மீண்டும் அதனை  ஓதிக்  கற்றுக்கொள்ள  முடியும்.  ஆனால் மறை ஓதுவானுடைய குடிபிறப்பு  ஒழுக்கம்  குன்றினால்  கெடும். 


 
135 .  அழுக்காறு உடையான்கான்  ஆக்கம் போன்று  இல்லை 
            ஒழுக்கம்   இலான்கண்  உயர்வு

பொறமை உடையவனிடத்தில்  ஆக்கம் இல்லாதவாறு போல ஒழுக்கம்   இல்லாதவனுடைய  வாழ்கையில்   உயர்வு  இல்லையாகும்.


136 .   ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர்  இழுக்கத்தின்  
           ஏதம் படுபாக்கு அறிந்து

 ஒழுக்கம்   தவறுதலால்  குற்றம்  உண்டாவதை அறிந்து  மனவலிமை உடைய  சான்றோர்  ஒழுக்கத்தில் தவறாமல் காத்துக் கொள்வர்.  
 

137 .     ஒழுக்கத்தின் எய்துபவர் மேன்மை இழுக்கத்தின்
              எய்துபவர்  எய்தாப்  பழி

ஒழுக்கத்தால்  எவரும்  மேம்பாட்டை  அடைவர்  ஒழுக்கத்திலிருந்து  தவறுதலால் அடையத்  தகாத  பெரும் பழியை  அடைவர்.


138 .  நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்  தீயொழுக்கம்
          என்றும்  இடும்பை  தரும் 

  நல்லொழுக்கம் இன்பமான  நல்வாழ்க்கைக்குக் காரணமாக இருக்கும்.    தீயொழுக்கம்  எப்போதும் துன்பத்தைக் கொடுக்கும்.
  
139 .    ஒழுக்கமுடயவர்க்கு   ஒல்லாவே தீய  .
             வழுக்கியும் வாயால்   சொல்லல்.  


தீய சொற்களைத்  தவறியும்  தம்முடைய  வாயால் சொல்லும்  குற்றம்  ஒழுக்கம் உடையவர்க்குப் பொருந்தாததாகும்.      
  

140   உலகத்தோடு  ஓட்ட  ஒழுகல்  பலகற்றும் 
         கல்லார்  அறிவிலாதார் 

உலகத்து  உயர்ந்தவரோடு  பொருந்த  ஒழுகும் முறையைக்  கற்காதவர்  பல நூல்களைக்  கற்றிந்த   போதிலும்  அறிவில்லாதவரே ஆவர் .   

திருக்குறள் அதிகாரம் 13

அடக்கம்  உடைமை 
  


121   அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை 
        ஆரிருள் உய்த்து விடும்.

 அடக்கம் ஒருவனை உயர்த்தித் தேவருள் சேர்க்கும் அடக்கம்
 இல்லாதிருத்தல் பொல்லாத இருள் போன்ற தீய வாழ்க்கையில் 
 செலுத்திவிடும்

122 .      காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
            அதனின்  உங்கு இல்லை உயிர்க்கு 

அடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு   போற்றிக்    காக்க வேண்டும்
அந்த  அடக்கத்தை  விட மேம்பட்ட ஆக்கம் உயிருக்கு இல்லை

123    
          செறிவு  அறிந்து சீர்மை பயக்கும் அறிவு  அறிந்து 
          ஆற்றின்  அடங்கப் பெறின்

அறிய வேண்டியவற்றை  அறிந்து நல்வழியில் அடங்கி ஒழுகப்   பெற்றால் 
அந்த        அடக்கம்  நல்லோரால்  அறியப்பட்டு  மேன்மை பயக்கும்

    
124       
              நிலையில்  திரியாது அடங்கியான் தோற்றம் 
              மலையினும்   மாணப்  பெரிது 

தன்  நிலையிலிருந்து மாறுபடாமல் அடங்கி ஒழுகு வோனுடைய உயர்வு 
மலையின்  உயர்வை விட மிகவும் பெரிதாகும்.

           
125     எல்லார்க்கும்  நன்று ஆம் பணிதல்  அவருள்ளும் 
          செல்வர்க்கே   செல்வம்   தகைத்து 

பணிவுடையவராக   ஒழுகுதல்   பொதுவாக   எல்லோருக்கும்  நல்லதாகும் 
அவர்களுள்  சிறப்பாகச்  செல்வர்க்கே  மற்றொரு  செல்வம் போன்றதாகும்.

       
126
     ஒருமையுள்   ஆமை  போல்  ஐந்து      அடக்கம்    ஆற்றின்
        எழுமையும்   ஏமாப்பு  உடைத்து.

ஒரு  பிறப்பில்  ஆமை  போல்  ஐம் பொறிகளையும்  அடக்கியாள  வல்லவனானால்  அது அவனுக்கு பிறப்பிலும் காப்பாகும் சிறப்பு உடையது

127  

        யாகாவார்     ஆயினும்  நாகாக்க  காவாக்கால் 
           சோகாப்பர்    சொல்லி   ழுக்குப்   பட்டு 

     
காக்க  வேண்டிய வறறுள்     எவற்றைக் காக்க   விட்டாலும்  நாவையாவது  காக்க  வேண்டும்  காக்கத்  தவறினால்  சொற்   குற்றத்தில்   அகப்பட்டுத்  துன்புறுவர் 

  
128    ஒன்றானும்  தீச்சொல்  பொருட்பயன்  உண்டாயின் 
         நன்று  ஆகா  தாகி  விடும்.

தீய  சொற்களின்  பொருளால்  விளையும் தீமை ஒன்றாயினும்  ஒருவனிடம் உண்டானால்  உதணல் மற்ற  அறங்க ளாலும்   நன்மை விளையாமல்  போகும்

129 .          தீயினால்  சுட்ட புண்  உள்ளாறும்  ஆறாதே 
                 நாவினால்   சுட்ட வடு.

தீயினால் சுட்ட புண் புறத்தே  வடு இருந்தாலும்  உள்ளே  ஆறி  விடும் 
ஆனால்  நாவினால்  தீய சொல்  கூறிச்  சுடும் வடு என்றும் ஆறாது

130 .       
                கதம் காத்துக்  கற்று  அடங்கல்  ஆற்று வாள் செவ்வி 
              அறம்   பார்க்கும்   ஆற்றின்  நுழைந்து 

சினம்  தோன்றாமல்  காத்து  கல்வி   கற்று  அடக்க முடையவனாக
இருக்க  வல்லவனுடைய   செல்வியை  அவனுடைய  வழியில் 
சென்று  அறம் பார்த்திருக்கும்.     

திருக்குறள் அதிகாரம் 12

 நடுவுநிலைமை



(111)    தகுதி எனஒன்று நன்றே பகுதியால்
            பாற்பட்டு ஒழுகப் பெறின்.

அந்தந்தப் பகுதிதோறும் முறையோடு பொருந்தி
ஒழுகப்பெற்றால், நடுவுநிலைமை என்று கூறப்படும்
அறம் நன்மையாகும்.

(112)    செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவுஇன்றி
            எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து.

நடுவுநிலைமை உடையவனின் செல்வலம்
அழிவில்லாமல் அவனுடைய வழியிலுள்ளார்க்கும்
உறுதியான நன்மை தருவதாகும்.

(113)    நன்றே தரினும் நடுவுஇகந்துஆம் ஆக்கத்தை
            அன்றே ஒழிய விடல்.

தீமை பயக்காமல் நன்மையே தருவதானாலும் நடுவு
நிலைமை தவறி உண்டாகும் ஆக்கத்தை அப்போதே
கைவிட வேண்டும்.

(114)     தக்கார் தகவிலர் என்பது அவரவர்
            எச்சத்தால் காணப் படும்.

நடுவுநிலைமை உடுயவர் நடுவுநிலைமை
இல்லாதவர் என்பது அவரவர்க்குப் பின் எஞ்சிநிற்கும்
புகழாலும் பழியாலும் காணப்படும்.

(115)    கெடும் பெருக்கமும் இல்லல்ல; நெஞ்சத்துக்
            கோடாமை சான்றோர்க்கு அணி.

கேடும் ஆக்கமும் வாழ்வில் இல்லாதவை அல்ல;
ஆகையால் நெஞ்சில் நடுவுநிலைமை தவறாமல்
இருத்தலே சான்றோர்க்கு அழகாகும்.

(116)    கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
            நடுஒரீஇ அல்ல செயின்.

தன நெஞ்சம் நடுவுநிலைமை நீங்கித் தவறு செய்ய
நினைக்குமாயின், 'நான் கெடப்போகின்றேன்' என்று
ஒருவன் அறிய வேண்டும்.

(117)     கெடுவாக  வையாது உலகம் நடுவாக
             நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.

நடுவுநிலையாக நின்று அறநெறியில் நிலைத்து
வாழ்கின்றவன் அடைந்த வறுமை நிலையைக் கேடு
என்று கொள்ளாது உலகம்.

(118)    சமன் செய்து சீர்தூக்கும் கோல்போல்
                                                      அமைந்துஒருபால்                                                         
            கோடாமை சான்றோர்க்கு அணி.

முன்னே தான் சமமாக இருந்து, பின்பு பொருளைச் சீர்
தூக்கும் துலாக்கோல் போல் அமைந்து, ஒரு பக்கமாகச் சாயாமல்நடுவுநிலைமை  போற்றுவது சான்றோர்க்கு அழகாகும்.

(119)    சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
            உள்கோட்டம் இன்மை பெறின்.

உள்ளத்தில் கோணுதல் இல்லாத தன்மையை
உறுதியாகப் பெற்றால், சொல்லிலும் கோணுதல்
இல்லாதிருத்தல் நடுவுநிலைமையாம்.

(120)    வாணிகம் செய்வார்க்கு வாணிபம் பேணிப்
            பிறவும் தம்போல் செயின்.

பிறர் பொருளையும் தம்பொருள் போல் போற்றிச்
செய்தால், அதுவே வாணிகம் செய்வோர்க்கு உரிய
நல்ல வாணிக முறையாகும்.  

Monday, August 16, 2010

திருக்குறள் அதிகாரம் 11

செய்ந்நன்றி அறிதல்

101.
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்ற லரிது.

தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்குச் செய்த உதவிக்கு மண்ணுலகையும் விண்ணுலகையும் கைம்மாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.

102.
காலத்தி னால்செய்த நன்றி சிறிதுஎனினும்
ஞாலத்தின் மானப் பெரிது.

உற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும், அதன் தன்மையை ஆராய்ந்தால் உலகத்தை விட மிகப் பெரியதாகும்.

103.
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலிற் பெரிது.

இன்ன பயன் கிடைக்கும் என்று ஆராயாமல் ஒருவன் செய்த உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால், அதன் நன்மை கடலை விடப் பெரியதாகும்.

104.
தினைத்துணை நன்றி செய்யினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.

ஒருவன் தினையளவாகிய உதவியைச் செய்த போதிலும் அதன் பயனை ஆராய்கின்றவர், அதனையே பனையளவாகக் கொண்டு போற்றுவர்.

105.
உதவி வரைத்தன்று உதவி, உதவி
செய்யப்பட்டார் சால்பின் வரைத்து.

கைம்மாறாகச் செய்யும் உதவி முன்செய்த உதவியின் அளவை உடையது அன்று, உதவி செய்யப்பட்டவரின் பண்புக்கு ஏற்ற அளவை உடையதாகும்.


106.
மறவற்க மாசற்றார் கேண்மை; துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு.

குற்றமற்றவரின் உறவை எப்போதும் மறத்தலாகாது.துன்பம் வந்த காலத்தில் உறுதுணையாய் உதவி-யவர்களின் நட்பை எப்போதும் விடலாகாது.

107.
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமம் துடைத்தவர் நட்பு.

தம்முடைய துன்பத்தைப் போக்கி உதவியவரின் நட்பைப் பல்வேறு வகையான பிறவியிலும் மறவாமல் போற்றுவர் பெரியோர்.

108.
நன்மை மறப்பது நன்றன்று; நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.

ஒருவர் முன் செய்த நன்மையை மறப்பது அறம் அன்று; அவர் செய்த தீமையைச் செய்த அப்பொழுதே மறந்து விடுவது அறம் ஆகும்.

109.
கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்.

முன் உதவி செய்தவர் பின்பு கொன்றாற் போன்ற துன்பத்தைச் செய்தாரானாலும், அவர் முன் செய்த ஒரு நன்மையை நினைத்தாலும் அந்தத் துன்பம் கெடும்.

110.
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்; உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு.

எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும்; ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை.

திருக்குறள் அதிகாரம் 10

இனியவை கூறல்



91.
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.

அன்பு கலந்து வஞ்சம் அற்றவைகளாகிய சொற்கள், மெய்ப்பொருள் கண்டவர்களின் வாய்ச்சொற்கள் இன்சொற்களாகும்.

92.
அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகன்அமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்.

முகம் மலர்ந்து இன்சொல் உடையவனாக இருக்கப் பெற்றால், மனம் மகிழ்ந்து பொருள் கொடுக்கும்ஈகையைவிட நல்லதாகும்.

93.
முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தான்ஆம்
இன்சொ லினதே அறம்.

முகத்தால் விரும்பி - இனியவை நோக்கி - உள்ளம் கலந்து இன்சொற்களைக் கூறும் தன்மையில்உள்ளதே அறமாகும்.

94.
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.

யாரிடத்திலும் இன்புறத்தக்க இன்சொல் வழங்குவோர்க்குத் துன்பத்தை மிகுதிப்படுத்தும் வறுமை என்பது இல்லையாகும்.

95.
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணிஅல்ல மற்றுப் பிற.

வணக்கம் உடையவனாகவும் இன்சொல் வழங்குவோனாகவும் ஆதலே ஒருவனுக்கு அணிகலனாகும்; மற்றைய அணிகள் அணிகள் அல்ல.

96.
அல்லவை தேய் அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.

பிறர்க்கு நன்மையானவற்றை நாடி இனிமை உடைய சொற்களைச் சொல்லின், பாவங்கள் தேய்ந்து குறைய, அறம் வளர்ந்து பெருகும்.

97.
நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்.

பிறர்க்கு நன்மையான பயனைத் தந்து நல்ல பண்பிலிருந்து நீங்காத சொற்கள், வழங்குவோனுக்கும் இன்பம் தந்து நன்மை பயக்கும்.

98.
சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்.

பிறர்க்குத் துன்பம் விளைக்கும் சிறுமையிலிருந்து நீங்கிய இனிய சொற்கள் மறுமைக்கும் இம்மைக்கும் வழங்குவோனுக்கு இன்பம் தரும்.

99.
இன்சொல் இனிதுஈன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது?

இனிய சொற்கள் இன்பம் பயத்தலைக் காண்கின்றவன், அவற்றிற்கு மாறான வன்சொற்களை வழங்குவது என்ன பயன் கருதியோ?

100.
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.

இனிய சொற்கள் இருக்கும்போது அவற்றைவிட்டுக் கடுமையான சொற்களைக் கூறுதல் கனிகள் இருக்கும்போது காய்களைப் பறித்து தின்பதைப் போன்றது.

திருக்குறள் அதிகாரம் 9

விருந்தோம்பல்
 


81.
இருந்துஓம்பி இல்வாழ்வது எல்லாம் விருந்துஓம்பி
வேளாண்மை செய்தல் பொருட்டு.

வீட்டில் இருந்து பொருள்களைக் காத்து இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தினரைப் போற்றி உதவி செய்யும் பொருட்டே ஆகும்.

82.
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்துஎனினும் வேண்டற்பாற் றன்று.

விருந்தினராக வந்தவர் வீட்டின் புறத்தே இருக்கத் தான் மட்டும் உண்பது சாவா மருந்தாகிய அமிழ்தமே ஆனாலும் அது விரும்பத்தக்கது அன்று.

83.
வரவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று.

தன்னை நோக்கி வரும் விந்தினரை நாள் தோறும் போற்றுகின்றவனுடைய வாழ்க்கை,துன்பத்தால் வருந்திக் கெட்டுப் போவதில்லை.

84.
அகன் அமர்ந்து செய்யாள் உறையும் முகன் அமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்.

நல்ல விருந்தினராய் வந்தவரை முகமலர்ச்சி கொண்டு போற்றுகின்றவனுடைய வீட்டில் மனமகிழ்ந்து திருமகள் வாழ்வாள்.

85.
வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்துஓம்பி
மிச்சில் மிசைவான் புலம்?

விருந்தினரை முன்னே போற்றி உணவளித்து மிஞ்சிய உணவை உண்டு வாழ்கின்றவனுடைய நிலத்தில் விதையும் விதைக்க வேண்டுமோ?

86.
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்துஇருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு.

வந்த விருந்தினரைப் போற்றி, இனி வரும் விருந்தினரை எதிர்பார்த்திருப்பவன், வானுலகத்தில் உள்ள தேவர்க்கும் நல்ல விருந்தினனாவான்.

87.
இனைத்துணைத்து என்பதொன்று இல்லை; விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்.

விருந்தோம்புதலாகிய வேள்வியின் பயன் இவ்வளவு என்று அளவு படுத்திக் கூறத்தக்கது அன்று; விருந்தினரின் தகுதிக்கு ஏற்ற அளவினதாகும்.

88.
பரிந்துஓம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப் படா தார்.

விருந்தினரை ஓம்பி அந்த வேள்வியில் ஈடுபடாதவர், பொருள்கள வருந்திக் காத்துப் (பின்பு இழந்து) பற்றுக் கோடு இழந்தோமே என்று இரங்குவர்.

89.
உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை: மடவார்கண் உண்டு.

செல்வ நிலையில் உள்ள வறுமை என்பது விருந்தோம்புதலைப் போற்றாத அறியாமையாகும்; அது அறிவிலிகளிடம் உள்ளதாகும்.


90.
மோப்பக் குழையும் அனிச்சம் முகம்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.

அனிச்சப்பூ மோந்தவுடன் வாடி விடும்; அது போல் முகம் மலராமல் வேறுபட்டு நோக்கியவுடன் விருந்தினர் வாடி நிற்பர்.

Wednesday, August 11, 2010

திருக்குறள் அதிகாரம் 8 அன்புடைமை




71.
 அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்? ஆர்வலர்

  புன்கண்நீர் பூசல் தரும்.


அன்புக்கும் அடைத்துவைக்கும் தாழ் உண்டோ அன்புடையவரின் சிறு கண்ணீரே (உள்ளே இருக்கும் அன்பைப்) பலரும் அறிய வெளிப்படுத்திவிடும்.


72.
அன்பிலர் எல்லாம் தமக்குரியர்; அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.

அன்பு இல்லாதவர் எல்லாப் பொருளையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வார்; அன்பு உடையவர் தம் உடம்பையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர்.



73.
அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு.

அருமையான உயிர்க்கு உடம்போடு பொருந்தி இருக்கின்ற உறவு, அன்போடு பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயன் என்று கூறுவர்.


74.
 அன்புஈனும் ஆர்வம் உடைமை; அதுஈனும்
  நண்புஎன்னும் நாடாச் சிறப்பு.

அன்பு, பிறரிடம் விருப்பம் உடையவராக வாழும் தன்மையைத் தரும்; அது எல்லோரிடத்திலும் நட்பு என்று சொல்லப்படும் அளவற்ற சிறப்பைத் தரும்.


75.
அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.

உலகத்தில் இன்பம் உற்று வாழ்கின்றவர் அடையும் சிறப்பு, அன்பு உடையவராகிப் பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயன் என்று கூறுவார்.


 76.
அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார்;

மறத்திற்கும் அதே துணை.

அறியாதவர், அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவர்; ஆராய்ந்து பார்த்தால்வீரத்திற்கும் அதுவே துணையாகும்.


77.
என்பு இலதனை வெயில்போலக் காயுமே

அன்பு இலதனை அறம்.

அறியாதவர், அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவர்; ஆராய்ந்து பார்த்தால் வீரத்திற்கும் அதுவே துணையாக நிற்கின்றது.

 
78.
அன்பகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்

வற்றல் மரம்தளிர்த் தற்று.

அகத்தில் அன்பு இல்லாமல் வாழும் உயிர்வாழ்க்கை வளமற்ற பாலைநிலத்தில் பட்டமரம் தளிர்த்தாற் போன்றது.


79.
புறத்துறுப்பு எல்லாம் எவன் செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு?

உடம்பின் அகத்து உறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்கு உடம்பின் புறத்து உறுப்புக்கள் எல்லாம் என்ன பயன் செய்யும்?



80.
அன்பின் வழியது உயிர்நிலை அதுஇலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.

அன்பின் வழியில் இயங்கும் உடம்பே உயிர்நின்ற உடம்பாகும்; அன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்பு எலும்பைத் தோல் போர்த்த வெற்றுடம்பே ஆகும்.