Friday, March 2, 2012

திருக்குறள் அதிகாரம் 18

 
 
 
வெஃகாமை  
 
 
171.   
 
         நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
         குற்றமும் ஆங்கே தரும்.


நடுவுநிலைமை  இல்லாமல் பிறர்க்குரிய  நல்ல பொருளை ஒருவன் கவர விரும்பினால் அவனுடைய குடியும் கெட்டுக் குற்றமும் அப்பொழுதே  வந்து சேரும்.
 
 
 
172.    
 
         படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
         நடுவன்மை நாணு பவர்.
 
 
நடுவுநிலைமை அல்லாதவற்றைக் கண்டு நாணி ஒதுங்குகின்றவர், பிறர் பொருளைக்  கவர்வதால் வரும் பயனை  விரும்பிப் பழியான  செயல்களைச்   செய்யார்.
 
 
 
173.  
 
         சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
         மற்றின்பம் வேண்டு பவர்.

 
அறநெறியால் பெறும் இன்பத்தை விரும்புகின்றவர், நிலையில்லாத சிறிய இன்பத்தை விரும்பி அறம் அல்லாதவற்றைச் செய்யார்.
 
 
174.  
 
         இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
         புன்மையில் காட்சி யவர்.
 
 
ஐம்புலன்களையும் வென்ற குற்றமில்லாத அறிவை உடையவர், யாம் வறுமை அடைந்தோம்,' என்று எண்ணியும் பிறர் பொருளை விரும்பார்.
 
 
 
175.   
 
 
        அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
         வெஃகி வெறிய செயின்


யாரிடத்திலும் பொருளைக் கவர விரும்பிப் பொருந்தாதவற்றைச் 
செய்தால்,  நுட்பமானதாய் விரிவுடையதாய் வளர்ந்த அறிவால் பயன் என்ன? 
 
 
 
176.     
 
       அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
       பொல்லாத சூழக் கெடும்.

அருளை விரும்பி அறநெறியில் நின்றவன், பிறனுடைய பொருளை விரும்பிப் பொல்லாத  குற்றங்களை எண்ணினால் கெடுவான்.
 
 
 
177.      
 
 
        வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
         மாண்டற் கரிதாம் பயன்.
 
பிறர் பொருளைக் கவர விரும்புவதால் ஆகும் ஆக்கத்தை விரும்பாதிருக்க வேண்டும்;  அது பயன் விளைக்குமபோது அப் பயன் நன்மையாவது அரிதாகும்.
 
 
 
178.    
 
        அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
        வேண்டும் பிறன் கைப் பொருள்.


 ஒருவனுடைய செல்வத்திற்குக் குறைவு நேராதிருக்க வழி எது என்றால், அவன் பிறனுடைய கைப்பொருளை விரும்பாதிருத்தலாகும்.  
 
 
 
 
179.   
 
 
        அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
         திறன்அறிந் தாங்கே திரு.


அறம் இஃது   என்று அறிந்து பிறர் பொருளை  விரும்பாத அறிவுடையாரைத்   திருமகள் தான் சேரும் திறன் அறிந்து அதற்கு ஏற்றவாறு சேர்வாள்.
 
 
 
180.  
 
 
       இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்
        வேண்டாமை என்னுஞ் செருக்கு.
 
விளைவை எண்ணாமல் பிறர் பொருளை  விரும்பினால் அஃது அழிவைத் தரும்;  அப் பொருளை விரும்பாமல் வாழும் பெருமை வெற்றியைத் தரும்.

Wednesday, February 29, 2012

திருக்குறள் அதிகாரம் 17

அழுக்காறாமை

  
161.   ஒழுக்காறாக் கொள்க ஒருவனதன் நெஞ்சத்து
            அழுக்காறு இலாத இயல்பு.
ஒருவன் தன் நெஞ்சில் பொறாமை இல்லாமல்வாழும் இயல்பைத் தனக்கு உரிய ஒழுக்க நெறியாகக் கொண்டுபோற்ற வேண்டும்.
   
162.     விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
             அழுக்காற்றின் அன்மை பெறின்

யாரிடத்திலும் பொறாமை இல்லாதிருக்கப்பெற்றால்,  ஒருவன் பெறத்தக்க மேம்பாடான பேறுகளில் அதற்கு ஒப்பானது வேறொன்றும் இல்லை.
163.   
                அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
                பேணாது அழுக்கறுப் பான்.
தனக்கு அறமும் ஆக்கமும் விரும்பாதவன் என்று கருதத் தக்கவனே, பிறனுடைய ஆக்கத்தைக் கண்டு மகிழாமல்  அதற்காகப்   பொறாமைப்படுவான். 
164.   
              அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றி
              ஏதம் படுபாக்கு அறிந்து.
பொறாமைப்படுதலாகிய தவறான நெறியில் துன்பம் ஏற்படுதலை  அறிந்து,  பொறாமை காரணமாக  அறமல்லாதவைகளைச் செய்யார் அறிவுடையோர்.
165.    
          அழுக்காறு உடை உடையார்க்கு அதுசாலும் ஒன்றார்
          வழுக்கியும் கேடின் பது.
பொறாமை உடையவர்க்கு வேறு பகை வேண்டா,  அஃது ஒன்றே போதும், பகைவர் தீங்கு செய்யத் தவறினாலும் தவறாமல் கேட்டைத்  தருவது அது. 
166.   
         கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
         உண்பதூஉம் இன்றிக் கெடும்.


பிறர்க்குத் உதவியாகக் கொடுக்கப்படும் பொருளைக் கண்டு  பொறாமைப்படுகின்றவனுடைய   சுற்றம்,  உடையும் உணவும் இல்லாமல் போய்விடும்.
167.    
          அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
           தவ்வையைக் காட்டி விடும்.


பொறாமை உடையவனைத் திருமகள் கண்டு பொறாமைப்பட்டுத்தன தமக்கைக்கு அவனைக் காட்டி நீங்கி விடுவாள்.
168.   
          அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
           தீயுழி உய்த்து விடும்.
 பொறாமை என்று   கூறப்படும்  ஒப்பற்ற பாவி ஒருவனுடைய  செல்வத்தையும் கெடுத்துத்  தீய வழியில் அவனைச் செலுத்தி விடும்.
169.   
       அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
       கேடும் நினைக்கப் படும்.


பொறாமை பொருந்திய நெஞ்சத்தானுடைய ஆக்கமும், பொறாமை இல்லாத நல்லவனுடைய கேடும் ஆராயத் தக்கவை.
  
170.  
       அழுக்கற்று அகன்றாரும் இல்லைஅஃது இல்லார்
       பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்.
பொறாமைப்பட்டுப்  பெருமையுற்றவரும் உலகத்தில் இல்லை;  பொறாமை இல்லாதவராய் மேம்பாட்டிலிருந்து நீங்கியவரும்  இல்லை.  

Tuesday, February 28, 2012

திருக்குறள் அதிகாரம் 16

பொறை உடைமை    
151. 

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வாரைப் பொறுத்தல் தலை.



தன்னை வெட்டுவோரையும் விழாமல் தாங்குகின்ற நிலம் போல், தம்மை இகழ்வோரையும் பொறுப்பதே தலையான பண்பாகும். 

152.  

பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
 மறத்தல் அதனினும் நன்று.



வரம்பு கடந்து பிறர் செய்த தீங்கை  எப்போதும் பொறுக்க வேண்டும். அத் தீங்கை  நினைவிலும் கொள்ளாமல் மறந்துவிடுதல் பொறுத்தலைவிட  நல்லது.


153.

 இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை.


வறுமையுள் வறுமை, விருந்தினரைப் போற்றாமல், நீக்குதல்;  வல்லமையுள் வல்லமை என்பது அறிவிலார் தீங்கு  செய்தலைப் பொறுத்தலாகும்.

154.


  நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொயுடைமை
போற்றி யொழுகப் படும்.



 நிறை உடையவனாக இருக்கும்  தன்மை தன்னை விட்டு  நீங்காமலிருக்க வேண்டினால்,  பொறுமையைப்  போற்றி ஒழுக வேண்டும்.


155.

ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பார
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து



 (தீங்கு செய்தவரைப்)  பொறுக்காமல் வருத்தினவரை உலகத்தார் ஒரு பொருளாக மதியார்; ஆனால், பொறுத்தவரைப்  பொன்போல்  மனத்துள்  வைத்து  மதிப்பர்.   

156.    

ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்.



தீங்கு செய்தவரைப் பொறுக்காமல் வருந்தினவர்க்கு  ஒருநாள் இன்பமே; பொறுத்தவர்க்கு உலகம் அழியும் வரைக்கும் புகழ் உண்டு.  

157.   

திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று.


தகுதி அல்லாதவைகளைத் தனக்குப் பிறர் செய்த  போதிலும்,  அதனால்,  அவர்க்கு வரும் துன்பத்திற்காக நொந்து,  அறம் அல்லாதவைகளச் செய்யாதிருத்தல் நல்லது.


158.   

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்
தகுதியான் வென்று விடல்.

 செருக்கினால் தீங்கானவற்றைச்  செய்தவரைத் தாம் தம்முடைய  பொறுமைப்  பண்பினால் பொறுத்து வென்றுவிட வேண்டும்.

159.   


துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சசொல் நோற்கிற் பவர்.



வரம்பு கடந்து நடப்பவரின் வாயில் பிறக்கும் கொடுஞ் சொற்களைப்   பொறுத்துக்  கொள்பவர்,  துறந்தவரைப் போலத் தூய்மையானவர் ஆவர்.


160.  

உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்.



உணவு உண்ணாமல் நோன்பு கிடப்பவர், பிறர்  சொல்லும் கொடுஞ் சொற்களைப் பொறுப்பவர்க்கு அடுத்த நிலையில்தான் பெரியவர் ஆவர்.

Monday, February 27, 2012

திருக்குறள் அதிகாரம் 15

பிறன்இல் விழையாமை  


141.  

பிறன் பொருளால்   பெட்டு ஒழுகும் பேதைமை ஞாலத்து
அறம் பொருள்  கண்டார்கண் இல். 

பிறனுடைய உரிமையாகிய மனைவியை விரும்பி நடக்கும் அறியாமை  உலகத்தில் அறமும் பொருளும் ஆராய்ந்து கண்டவரிடும் இல்லை 


142. 

அறன் கடை  நின்றாருள் எல்லாம்  பிறன் கடை 
நின்றாரின்  பேதையார் இல். 

அறத்தை  விட்டுத்  தீநெறியில் நின்றவர்  எல்லாரிலும் பிறன் மனைவியை விரும்பி அவனுடைய வாயிலில் சென்று நின்றவரைப்  போல் அறிவிலிகள் இல்லை

143. 

விளிந்தாரின்  வேறு  அல்லர்  மன்ற தெளிந்தாரில் 
தீமை  புரிந்து  ஒழுகுவார் 


ஐயமில்லாமல் தெளிந்து நம்பியவருடைய மனைவியிடத்தே விருப்பம் கொண்டு தீமையைச் செய்து நடப்பவர் செத்தவரை விட  வேறுபட்டவர்    அல்லர்.

144.

எனைத்துணையர்  ஆயினும்  என் ஆம்? தினைத்துணையும் 
தேரான்  பிறனில்  புகல்

               
  தினையளவும்  ஆராய்ந்து  பார்க்காமல்  பிறனுடைய மனைவியிடம்
செல்லுதல்  எவ்வளவு  பெருமையை உடையவராயினும்  என்னவாக  முடியும்?

145.

 எளிது  என  இல்லிறப்பான்  எய்தும்  எய்ஞான்ரும்      
 விளியாது  நிற்கும்  பழி

இச்  செயல்  எளியது  என  எண்ணிப்  பிறனுடைய  மனைவியிடம்   நெறி  தவறிச்  செல்கின்றவன்  எப்போதும்  அழியாமல் நிலை  நிற்கும்  பழியை  அடைவான்     


146. 

பகை பாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்.


பகை பாவம் அச்சம் பழி என்னும் இந் நான்கு குற்றங்களும் பிறன் மனைவியிடத்து நெறி தவறி நடப்பவனிடத்திலிருந்து நீங்காவாம்.
 
 
147.  
அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்
பெண்மை நயவா தவன்.
 
 
 
அறத்தின் இயல்போடு பொருந்தி இல்வாழ்க்கை வாழ்பவன், பிறனுக்கு உரிமையானவளின் பெண் தன்மையை விரும்பாதவனே.  
 
 
 
148. 
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற வொழுக்கு.
 
 
 
பிறனுடைய மனைவியை விரும்பி நோக்காத பெரிய ஆண்மை, சான்றோர்க்கு அறம் மட்டும் அன்று; நிறைந்த ஒழுக்கமுமாகும்.
 
 
 
149. 

நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறற்குரியாள் தோள்தோயா தார்
 
 
 
கடல் சூழ்ந்த உலகத்தில் நன்மைக்கு உரியவர் யார் என்றால் பிறனுக்கு உரிமையானவளின் தோளைப் பொருந்தாதவரே  ஆவார்.
 
 
150.  
அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று.
 
 
 
ஒருவன் அறநெறியில் நிற்காமல் அறமில்லாதவைகளைச் செய்தாலும், பிறனுக்கு உரியவளின்  பெண்மையை விரும்பாமல் வாழ்தல் நல்லது. 

Wednesday, February 22, 2012

Tuesday, January 25, 2011

திருக்குறள் அதிகாரம் 14

ஒழுக்கம் உடைமை  



131 .     ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
             உயிரினும் ஒம்பப் படும்

ஒழுக்கமே எல்லோருக்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால்  அந்த   ஒழுக்கமே உயிரை விடச் சிறந்ததாக   போற்றப்படும்            


132       பரிந்து ஒம்பிக் காக்க     ஒழுக்கம் தெரிந்து  ஒம்பித்
             தேரினும்  அதே  துணை  


ஒழுக்கத்தை வருந்தியும்  போற்றிக் காக்க வேண்டும்  பலவற்றையும்  ஆராய்ந்து  போற்றித் தெளிந்தாலும் அந்த  ஒழுக்கமே வாழ்கையில்  துணையாக  விளங்கும்

      
133 .   ஒழுக்கம் உடமை குடிமை இழுக்கம்
            இழிந்த பிறப்பாய் விடும்


ஒழுக்கம் உடையவராக  வாழ்வதே  உயர்ந்த  குடிப் பிறப்பின்  தன்மையாகும்.  ஒழுக்கம் தவறுதல்  இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகி  விடும்.


134 .     மறப்பின் ஒத்துக் கொளலாகும்  பார்ப்பான் 
             பிறப்பொழுக்கம் குன்றக் கெடும் 

 கற்ற மறைபொருளை  மறந்தாலும்  மீண்டும் அதனை  ஓதிக்  கற்றுக்கொள்ள  முடியும்.  ஆனால் மறை ஓதுவானுடைய குடிபிறப்பு  ஒழுக்கம்  குன்றினால்  கெடும். 


 
135 .  அழுக்காறு உடையான்கான்  ஆக்கம் போன்று  இல்லை 
            ஒழுக்கம்   இலான்கண்  உயர்வு

பொறமை உடையவனிடத்தில்  ஆக்கம் இல்லாதவாறு போல ஒழுக்கம்   இல்லாதவனுடைய  வாழ்கையில்   உயர்வு  இல்லையாகும்.


136 .   ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர்  இழுக்கத்தின்  
           ஏதம் படுபாக்கு அறிந்து

 ஒழுக்கம்   தவறுதலால்  குற்றம்  உண்டாவதை அறிந்து  மனவலிமை உடைய  சான்றோர்  ஒழுக்கத்தில் தவறாமல் காத்துக் கொள்வர்.  
 

137 .     ஒழுக்கத்தின் எய்துபவர் மேன்மை இழுக்கத்தின்
              எய்துபவர்  எய்தாப்  பழி

ஒழுக்கத்தால்  எவரும்  மேம்பாட்டை  அடைவர்  ஒழுக்கத்திலிருந்து  தவறுதலால் அடையத்  தகாத  பெரும் பழியை  அடைவர்.


138 .  நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்  தீயொழுக்கம்
          என்றும்  இடும்பை  தரும் 

  நல்லொழுக்கம் இன்பமான  நல்வாழ்க்கைக்குக் காரணமாக இருக்கும்.    தீயொழுக்கம்  எப்போதும் துன்பத்தைக் கொடுக்கும்.
  
139 .    ஒழுக்கமுடயவர்க்கு   ஒல்லாவே தீய  .
             வழுக்கியும் வாயால்   சொல்லல்.  


தீய சொற்களைத்  தவறியும்  தம்முடைய  வாயால் சொல்லும்  குற்றம்  ஒழுக்கம் உடையவர்க்குப் பொருந்தாததாகும்.      
  

140   உலகத்தோடு  ஓட்ட  ஒழுகல்  பலகற்றும் 
         கல்லார்  அறிவிலாதார் 

உலகத்து  உயர்ந்தவரோடு  பொருந்த  ஒழுகும் முறையைக்  கற்காதவர்  பல நூல்களைக்  கற்றிந்த   போதிலும்  அறிவில்லாதவரே ஆவர் .   

திருக்குறள் அதிகாரம் 13

அடக்கம்  உடைமை 
  


121   அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை 
        ஆரிருள் உய்த்து விடும்.

 அடக்கம் ஒருவனை உயர்த்தித் தேவருள் சேர்க்கும் அடக்கம்
 இல்லாதிருத்தல் பொல்லாத இருள் போன்ற தீய வாழ்க்கையில் 
 செலுத்திவிடும்

122 .      காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
            அதனின்  உங்கு இல்லை உயிர்க்கு 

அடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு   போற்றிக்    காக்க வேண்டும்
அந்த  அடக்கத்தை  விட மேம்பட்ட ஆக்கம் உயிருக்கு இல்லை

123    
          செறிவு  அறிந்து சீர்மை பயக்கும் அறிவு  அறிந்து 
          ஆற்றின்  அடங்கப் பெறின்

அறிய வேண்டியவற்றை  அறிந்து நல்வழியில் அடங்கி ஒழுகப்   பெற்றால் 
அந்த        அடக்கம்  நல்லோரால்  அறியப்பட்டு  மேன்மை பயக்கும்

    
124       
              நிலையில்  திரியாது அடங்கியான் தோற்றம் 
              மலையினும்   மாணப்  பெரிது 

தன்  நிலையிலிருந்து மாறுபடாமல் அடங்கி ஒழுகு வோனுடைய உயர்வு 
மலையின்  உயர்வை விட மிகவும் பெரிதாகும்.

           
125     எல்லார்க்கும்  நன்று ஆம் பணிதல்  அவருள்ளும் 
          செல்வர்க்கே   செல்வம்   தகைத்து 

பணிவுடையவராக   ஒழுகுதல்   பொதுவாக   எல்லோருக்கும்  நல்லதாகும் 
அவர்களுள்  சிறப்பாகச்  செல்வர்க்கே  மற்றொரு  செல்வம் போன்றதாகும்.

       
126
     ஒருமையுள்   ஆமை  போல்  ஐந்து      அடக்கம்    ஆற்றின்
        எழுமையும்   ஏமாப்பு  உடைத்து.

ஒரு  பிறப்பில்  ஆமை  போல்  ஐம் பொறிகளையும்  அடக்கியாள  வல்லவனானால்  அது அவனுக்கு பிறப்பிலும் காப்பாகும் சிறப்பு உடையது

127  

        யாகாவார்     ஆயினும்  நாகாக்க  காவாக்கால் 
           சோகாப்பர்    சொல்லி   ழுக்குப்   பட்டு 

     
காக்க  வேண்டிய வறறுள்     எவற்றைக் காக்க   விட்டாலும்  நாவையாவது  காக்க  வேண்டும்  காக்கத்  தவறினால்  சொற்   குற்றத்தில்   அகப்பட்டுத்  துன்புறுவர் 

  
128    ஒன்றானும்  தீச்சொல்  பொருட்பயன்  உண்டாயின் 
         நன்று  ஆகா  தாகி  விடும்.

தீய  சொற்களின்  பொருளால்  விளையும் தீமை ஒன்றாயினும்  ஒருவனிடம் உண்டானால்  உதணல் மற்ற  அறங்க ளாலும்   நன்மை விளையாமல்  போகும்

129 .          தீயினால்  சுட்ட புண்  உள்ளாறும்  ஆறாதே 
                 நாவினால்   சுட்ட வடு.

தீயினால் சுட்ட புண் புறத்தே  வடு இருந்தாலும்  உள்ளே  ஆறி  விடும் 
ஆனால்  நாவினால்  தீய சொல்  கூறிச்  சுடும் வடு என்றும் ஆறாது

130 .       
                கதம் காத்துக்  கற்று  அடங்கல்  ஆற்று வாள் செவ்வி 
              அறம்   பார்க்கும்   ஆற்றின்  நுழைந்து 

சினம்  தோன்றாமல்  காத்து  கல்வி   கற்று  அடக்க முடையவனாக
இருக்க  வல்லவனுடைய   செல்வியை  அவனுடைய  வழியில் 
சென்று  அறம் பார்த்திருக்கும்.