Sunday, July 1, 2012

திருக்குறள் அதிகாரம் 23

                                     ஈகை



221.

வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறயெதிர்ப்பை நீர் துடைத்து.


வறியவர்க்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை எனப்படுவது,
மட்டவர்க்குக் கொடுப்பதெல்லாம் பயனை எதிர்பார்த்துக்
கொடுக்கும்  தன்மை  உடையது.


222.

நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று.


பிறரிடமிருந்து பொருள் பெற்றுக்கொள்ளுதல் நல்ல நெறி  என்றாலும்  கொள்ளல்  தீமையானது. மேலுலகம் இல்லை  என்றாலும்
பிறர்க்குக் கொடுப்பதே நல்லது.


223.

இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே யுள.


 யான் வறியன்' என்னும் துன்பச் சொல்லை ஒருவன் உரைப்பதற்கு முன் அவனுக்குக் கொடுக்கும் தன்மை, நல்ல குடிப்பிறப்பு  உடையவனிடம்  உண்டு.



224.

இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகம் காணும் அளவு.


 பொருள் வேண்டும் என்று இரந்தவரின் மகிழ்ந்த முகத்தைக் காணும்  
வரைக்கும்  (இரத்தலைப் போலவே) இரந்து  கேட்கப் படுவதும் 
துன்பமானது.



225.

ஆற்றுவார் ஆற்றல்  பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்.


தவ வலிமை உடையவரின் வலிமை பசுயைப் பொறுத்துக்
கொள்ளலாகும்.  அதுவும் அப் பசியை உணவு கொடுத்து
மாற்றுகின்றவரின்  ஆற்றலுக்குப் பிற்பட்டதாகும்.  



226.

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.



வறியவரின்  கடும் பசியைத் தீர்க்கவேண்டும்; அதுவே பொருள் பெற்ற
ஒருவன் அப் பொருளைத் தனக்குப் பிற்காலத்தில் உதவுமாறு சேர்த்து
வைக்கும் இடமாகும்.



227.

பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது.


தான் பெற்ற உணவைப் பலரோடும் பகுத்து உண்ணும்   பழக்கம்
உடையவனைப் பசி என்று கூறப்படும் தீய நோய் அணுகுதல்  இல்லை.



228.

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்.


தாம் சேர்த்துள்ள பொருளைப் பிறர்க்குக் கொடுக்காமல் வைத்திருந்து
பின் இழந்து விடும் வன்கண்மை உடையவர், பிறர்க்கு கொடுத்து
மகிழும் மகிழ்ச்சியை அறியாரோ?  



229.

இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல்.


பொருளின் குறைபாட்டை நிரப்புவதற்காக  உள்ளதைப் பிறர்க்கு ஈயாமல் தாமே   தமியராய் உண்பது வறுமையால் இரப்பதைவிடத் துன்பமானது.
230.

சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை.

சாவதவிடத் துன்பமானது வேறொன்றும் இல்லை.  ஆனால்  
வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாத நிலை வந்தபோது அச்சாதலும் இனியதே ஆகும்.
 
 
 

Wednesday, March 7, 2012

திருக்குறள் அதிகாரம் 22

ஒப்புரவு அறிதல்

211 .    

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என் ஆற்றுங் கொல்லோ உலகு.



இந்த உலகத்தார் தமக்கு உதவும் மழைக்கு என்ன கைம்மாறு செய்கின்றனர்?  மழை போன்றவர் செய்யும்  உதவிகளும் கைம்மாறு வேண்டாதவை.
  

212 .  

தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.


ஒப்புரவாலன் தன்னால் இயன்ற முயற்சி செய்து சேர்த்த பொருள் எல்லாம் தக்கவர்க்கு உதவி செய்வதற்கே ஆகும்.

213 .  

புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் ல்ல பிற.



பிறர்க்கு உதவி செய்து வாழும் ஒப்புரவைப்போல நல்லனவாகிய வேறு அறப்பகுதிகளைத்  தேவருலகத்திலும் இவ்வுலகத்திலும் பெறுதல் இயலாது.

214 .  


ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள்  வைக்கப்படும்.


ஒப்புரவை அறிந்து போற்றிப் பிறர்க்கு உதவியாக வாழ்கின்றவன் உயிர்வாழ்கின்றவன் ஆவான்;  மற்றவன் செத்தவருள்   சேர்த்துக்  கருதப்படுவான்.  

215 .   


ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.


ஒப்புரவினால் உலகம் வாழுமாறு விரும்பும் பேரறிவாளியின்  செல்வம், ஊரார் நீருண்ணும் குளம், நீரால் நிறைந்தாற்  போன்றது.

216 .  


பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்.



ஒப்புரவாகிய நற்பண்பு உடையவனிடம்  செல்வம் சேர்ந்தால்  அஃது ஊரின் நடுவே உள்ள பயன் மிகுந்த மரம் பழங்கள் பழுத்தாற்  போன்றது.

217 .   


மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்.



ஒப்புரவாகிய பெருந்தகைமை உடையவனிடம் செல்வம் சேர்ந்தால், அஃது எல்லா உறுப்புகளும் மருந்தாகிப் பயன் படத் தவறாத மரம் போன்றது.

218 .  


இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர்.


ஒப்புரவு அறிந்து ஒழுகுதாகிய தம் கடமை அறிந்த அறிவை உடையவர், செல்வவளம்  இல்லாத காலத்திலும்  ஒப்புரவுக்குத் தளர மாட்டார்.   

219 .  


நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர்
செய்யாது அமைகலா வாறு.


ஒப்புரவாகிய நற்பண்பு உடையவன் வறுமை உடையவனாதல்,  செய்யத்தக்க உதவிகளைச் செய்யாமல் வருந்துகின்ற   தன்மையாகும்.

220 .   


ஒப்புரவினால்வரும் கேடெனில் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து



ஒப்புரவால் கேடு வரும் என்றால், அக் கேடு ஒருவன் தன்னை விற்றாவது வாங்கிக் கொள்ளும் தகுதி உடையதாகும்.

Tuesday, March 6, 2012

திருக்குறள் அதிகாரம் 21

தீவினை அச்சம்


201.
தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவார்
தீவினை என்னும் செருக்கு.
    
தீயவை செய்தலாகிய செருக்கைத் தீவினை  உடைய பாவிகள் அஞ்சார்;  தீவினை இல்லாத மேலோர் மட்டுமே அஞ்சுவர்.
 
 
202 . 
       தீயவை தீய பயத்தலாலான் தீயவை
 தீயினும் அஞ்சப் படும்.


தீயசெயல்கள் தீமையை விளைவிக்கும் தன்மை உடையவனாக இருத்தலால்,  அத் தீய செயல்கள் தீயைவிடக் கொடியனவாகக் கருதி அஞ்சப்படும்.
 
 
203 .  
அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல்.


தம்மை வருத்துவோர்க்கும் தீய செயல்களைச்  செய்யாமலிருத்தலை, அறிவு  எல்லாவற்றிலும் தலையான அறிவு என்று கூறப்படும். 
 
 
204 .
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு.
பிறனுக்கு கேட்டைத் தரும் தீயசெயல்களை ஒருவன்மறந்தும்  எண்ணக்  கூடாது.  எண்ணினால்  எண்ணியவனுக்கு கேடு விளையுமாறு  அறம்  எண்ணும்.  
205  
இலன் என்று தீயவை செய்யற்க செய்யின்
இலனாகும் மற்றும் பெயர்த்து.
யான் வறியவன்' என்று நினைத்துத் தீயசெயல்களைச்  செய்யக்கூடாது; செய்தால்  மீண்டும் வறியவன் ஆகி வருந்துவான்.   



206 .  
தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேன்டா தான்.


துன்பம் செய்யும் தீவினைகள் தன்னை வருத்துதலை விரும்பாதவன்,  தீய செயல்களைத் தான் பிறருக்குச்  செய்யாமலிருக்க வேண்டும்.
 
 
207 .  
எனைப்பகை யுற்றாகும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும்.
எவ்வளவு கொடிய பகை உடையவரும் தப்பி வாழ முடியும்; ஆனால் தீயவை செய்தால் வரும் தீ- வினையாகிய பகை நீங்காமல் பின் சென்று வருத்தும்.
 
 
 
208 .  
தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது பின்சென்று அடும்.

தீய செயல்களைச் செய்தவர் கேட்டை அடைதல் ஒருவனுடைய நிழல் அவனை விடாமல் வந்து அடியில் தங்கியிருத்தலைப் போன்றது. 



209 .  
தன்னைத்தான் காதலனாமின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினை பால்.
ஒருவன் தன்னைத் தான் விரும்பி வாழபவனாயின்,தீய செயலாகிய பகுதியை எவ்வளவு சிறியதாயினும் பொருந்தாமல் நீங்க வேண்டும்.
 
 
210 . 
அருங்கேடன் என்பது  அறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்.


ஒருவன் தவறான நெறியில் சென்று தீய செயல் செய்யாதிருப்பானானால்  அவன் கேடு இல்லாதவன் என்று அறியலாம்.  

Saturday, March 3, 2012

திருக்குறள் அதிகாரம் 20



பயனில சொல்லாமை



191 .    பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
            எல்லாரும் எள்ளப் படும்.




கேட்டவர்  பலரும்  வெறுக்கும் படியாகப் பயனில்லாத  சொற்களைச்  சொல்லுகின்றவன்  எல்லோராலும்  இகழப்படுவான்.


192 .    பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
             நட்டார்கள் செய்தலிற் றீது.
    

 பலர் முன்னே பயனில்லாத சொற்களைச் சொல்லுதல் நண்பரிடத்தில் அறம் இல்லாத செயல்களைச் செய்தலை    விடத் தீமையானதாகும் 


193 .    நயனிலன் என்பது சொல்லும்  பயனில
            பாரித் துரைக்கும் உரை.



 ஒருவன் பயனில்லாத பொருள் களைப் பற்றி விரிவாகச்   சொல்லும்  சொற்கள்  அவன் அறம் இல்லாதவன் என்பதை  அறிவிக்கும்

194 .     நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாரப்
             பண்பில்சொல் பல்லா ரகத்து.



பயனோடு பொருந்தாத  பண்பு  இல்லாத சொற்களை  பலரிடத்தும்  சொல்லுதல் அறத்தோடு பொருந்தாமல் நன்மையிலிருந்து நீங்கச் செய்யும்

195 .       சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
               நீர்மை யுடையார் சொலின்



பயனில்லாத  சொற்களை நல்ல பண்பு உடையவர் சொல்லுவரானால் அவருடைய மேன்பாடு அவர்க்குரிய மதிப் போடு   நீங்கி  விடும்.

196 .      பயனில் சொல் பாராட்டு வானை மகன்எனல்
              மக்கட் பதடி யெனல்.


பயனில்லாத   சொற்களை ப  பல முறையும்  சொல்லுகின்ற  ஒருவனை  மனிதன் என்று சொல்லக்கூடாது;  மக்களுள்    பதர் என்று சொல்ல வேண்டும். 


197 .     நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
             பயனில சொல்லாமை நன்று.



அறம் இல்லாதவற்றைச் சொன்னாலும் சொல்லலாம்; சான்றோர்  பயனில்லா  சொற்களைச்  சொல்லாமல் இருத்தல்  நன்மையாகும்

198 .    அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
            பெரும்பயன் இல்லாத சொல்.


அருமையான   பயன்களை ஆராயவல்ல அறிவை உடைய அறிஞர், மிக்க  பயன்  இல்லாத சொற்களை   ஒருபோதும் சொல்ல மாட்டார். 
 
199 .      பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார்  மருள்தீர்ந்த
         மாசறு காட்சி யவர்.


மயக்கத்தில் இருந்து தெளிந்த மாசற்ற அறிவை உடையவர்  பயன் நீங்கிய சொற்களை ஒருகால் மறந்தும் சொல்ல மாட்டார்.

200.     சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
       சொல்லிற் பயனிலாச் சொல்.


சொற்களில் பயனுடைய சொற்களை மட்டுமே சொல்ல வேண்டும்;  பயன் இல்லாதவைகளாகிய சொற்களைச் சொல்லவே  கூடாது.  

Friday, March 2, 2012

திருக்குறள் அதிகாரம் 19

 
 
புறங்கூறாமை   
 
 
181 .    அறம்  கூறான் அல்ல  செயினும் ஒருவன் 
             புறம்  கூறான்  என்றல்  இனிது 
 
 
இவன் அறத்தை  போற்றி கூறாதவனாய் அறமல்லாதவற்றை  செய்தாலும்  மற்றவனைப் பற்றி புறம் கூறாமல் இருக்கிறான்  என்று  சொல்லப்படுதல்  நல்லது. 
 
 
182 .     அறன் அழிஇ  அல்லவை  செய்தலின்  தீதே
              புறன்      அழி இப்    பொய்த்து  நகை 
 
 
  அறத்தை அழித்து பேசி அரமல் லா தவைகளைச்   செய்தலை விட 
ஒருவன்  இல்லாதவிடத்தில்  அவனைப் பழித்துப்  பேசி  நேரில் பொய்யாக முகமல்ர்ந்து  பேசுதல்  தீமையாகும்    
 
 
183 .    புறம் கூறிப் பொய்த்து உயி ர்  வாழ்தலின் சாதல்  
             அறம் கூறும் ஆக்கம்  தரும்
 
 
   புறங் கூறிப் பொய்யாக நடந்து உயிர்  வாழ்தலை விட  அவ்வாறு  செய்யாமல்  வறுமை   உற்று இறந்து விடுதல்  அற  நூல்கள்  சொல்லும்  ஆக்கத்தை  தரும்.
 
 
 
184 .     கண்  நின்று  கண் அறச்  சொல்லினும்  சொல்லற்க்
              முன் இன்று  பின் நோக்கா ச்  சொல் 
 
 
எதிரே  நின்று  கண் ணோட்டம்  இல்லாமல் கடுமையாகச்  சொன்னாலும் 
சொல்லலாம்  நேரில்  இல்லாத போது பின் விளைவை  ஆராயாத சொல்லைச்  சொல்லக்கூடாது 
                        
 
185 .    அறம் சொல்லும்  நெஞ்சத்தான்  அன்மை  புறம் சொல்லும்   
             புன்மையால்  காணப்படும்
 
 
அறத்தை நல்லதென்று  போற்றும் நெஞ்சம் இல்லாத தன்மை ஒருவன் மற்றவனைப்  பற்றி  புறம் கூறுகின்ற  சிறுமையால்  காணப்படும். 
 
 
 
186 .     பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
             திறன்தெரிந்து கூறப்படும்.
 
 
மற்றவனைப்  பற்றி  புறம் கூறுகின்றவன்  அவனுடைய பழிகள் பலவற்றிலும்   நோகத்தக்கவைகளை  ஆராய்ந்து  கூறிப் பிறரால்  பழிக்கப்படுவான்.  
 
 
187 .      பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
              நட்பாடல் தேற்றா தவர்.
 
 
மகிழும்படியாக  பேசி நட்பு கொள்ளுதல் நன்மை என்று தெளியாதவர் தம்மை  விட்டு நீங்கும் படியாகப் புறம் கூறி  நண்பரையும்  பிரித்து  விடுவர். 
 
 
188 .     துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
             என்னைகொல் ஏதிலார் மாட்கு.
 
 
நெருங்கி  பழகியவரின்  குற்றத்தையும் புறம் கூறித்  தூற்றும்  இயல்புடையவர்  பழகாத  அயலார்ரிடத்து  என்ன செயவார்ரோ 
 
 
189 .      அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்
              புன்சொல் உரைப்பான் பொறை.
 
 
ஒருவர் நேரில் இல்லாதது  கண்டு பழிச்சொல் கூறுவோனுடைய உடல் பாரத்தை ' இவனையும் சுமப்பதே எனக்கு அறம்'    என்று கருதி நிலம் சுமகின்றதோ ?
 
 
190        ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
              தீதுண்டோ மன்னும் உயிற்கு.

 
அயலாருடைய  குற்றத்தைக் காண்பது  போல் தம் குற்றத்தை யும்  காண வல்லவரானால் நிலை பெற்ற  உயிர்  வாழ்க்கைக்குத்  துன்பம்  உண்டோ      

திருக்குறள் அதிகாரம் 18

 
 
 
வெஃகாமை  
 
 
171.   
 
         நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
         குற்றமும் ஆங்கே தரும்.


நடுவுநிலைமை  இல்லாமல் பிறர்க்குரிய  நல்ல பொருளை ஒருவன் கவர விரும்பினால் அவனுடைய குடியும் கெட்டுக் குற்றமும் அப்பொழுதே  வந்து சேரும்.
 
 
 
172.    
 
         படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
         நடுவன்மை நாணு பவர்.
 
 
நடுவுநிலைமை அல்லாதவற்றைக் கண்டு நாணி ஒதுங்குகின்றவர், பிறர் பொருளைக்  கவர்வதால் வரும் பயனை  விரும்பிப் பழியான  செயல்களைச்   செய்யார்.
 
 
 
173.  
 
         சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
         மற்றின்பம் வேண்டு பவர்.

 
அறநெறியால் பெறும் இன்பத்தை விரும்புகின்றவர், நிலையில்லாத சிறிய இன்பத்தை விரும்பி அறம் அல்லாதவற்றைச் செய்யார்.
 
 
174.  
 
         இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
         புன்மையில் காட்சி யவர்.
 
 
ஐம்புலன்களையும் வென்ற குற்றமில்லாத அறிவை உடையவர், யாம் வறுமை அடைந்தோம்,' என்று எண்ணியும் பிறர் பொருளை விரும்பார்.
 
 
 
175.   
 
 
        அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
         வெஃகி வெறிய செயின்


யாரிடத்திலும் பொருளைக் கவர விரும்பிப் பொருந்தாதவற்றைச் 
செய்தால்,  நுட்பமானதாய் விரிவுடையதாய் வளர்ந்த அறிவால் பயன் என்ன? 
 
 
 
176.     
 
       அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
       பொல்லாத சூழக் கெடும்.

அருளை விரும்பி அறநெறியில் நின்றவன், பிறனுடைய பொருளை விரும்பிப் பொல்லாத  குற்றங்களை எண்ணினால் கெடுவான்.
 
 
 
177.      
 
 
        வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
         மாண்டற் கரிதாம் பயன்.
 
பிறர் பொருளைக் கவர விரும்புவதால் ஆகும் ஆக்கத்தை விரும்பாதிருக்க வேண்டும்;  அது பயன் விளைக்குமபோது அப் பயன் நன்மையாவது அரிதாகும்.
 
 
 
178.    
 
        அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
        வேண்டும் பிறன் கைப் பொருள்.


 ஒருவனுடைய செல்வத்திற்குக் குறைவு நேராதிருக்க வழி எது என்றால், அவன் பிறனுடைய கைப்பொருளை விரும்பாதிருத்தலாகும்.  
 
 
 
 
179.   
 
 
        அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
         திறன்அறிந் தாங்கே திரு.


அறம் இஃது   என்று அறிந்து பிறர் பொருளை  விரும்பாத அறிவுடையாரைத்   திருமகள் தான் சேரும் திறன் அறிந்து அதற்கு ஏற்றவாறு சேர்வாள்.
 
 
 
180.  
 
 
       இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்
        வேண்டாமை என்னுஞ் செருக்கு.
 
விளைவை எண்ணாமல் பிறர் பொருளை  விரும்பினால் அஃது அழிவைத் தரும்;  அப் பொருளை விரும்பாமல் வாழும் பெருமை வெற்றியைத் தரும்.

Wednesday, February 29, 2012

திருக்குறள் அதிகாரம் 17

அழுக்காறாமை

  
161.   ஒழுக்காறாக் கொள்க ஒருவனதன் நெஞ்சத்து
            அழுக்காறு இலாத இயல்பு.
ஒருவன் தன் நெஞ்சில் பொறாமை இல்லாமல்வாழும் இயல்பைத் தனக்கு உரிய ஒழுக்க நெறியாகக் கொண்டுபோற்ற வேண்டும்.
   
162.     விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
             அழுக்காற்றின் அன்மை பெறின்

யாரிடத்திலும் பொறாமை இல்லாதிருக்கப்பெற்றால்,  ஒருவன் பெறத்தக்க மேம்பாடான பேறுகளில் அதற்கு ஒப்பானது வேறொன்றும் இல்லை.
163.   
                அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
                பேணாது அழுக்கறுப் பான்.
தனக்கு அறமும் ஆக்கமும் விரும்பாதவன் என்று கருதத் தக்கவனே, பிறனுடைய ஆக்கத்தைக் கண்டு மகிழாமல்  அதற்காகப்   பொறாமைப்படுவான். 
164.   
              அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றி
              ஏதம் படுபாக்கு அறிந்து.
பொறாமைப்படுதலாகிய தவறான நெறியில் துன்பம் ஏற்படுதலை  அறிந்து,  பொறாமை காரணமாக  அறமல்லாதவைகளைச் செய்யார் அறிவுடையோர்.
165.    
          அழுக்காறு உடை உடையார்க்கு அதுசாலும் ஒன்றார்
          வழுக்கியும் கேடின் பது.
பொறாமை உடையவர்க்கு வேறு பகை வேண்டா,  அஃது ஒன்றே போதும், பகைவர் தீங்கு செய்யத் தவறினாலும் தவறாமல் கேட்டைத்  தருவது அது. 
166.   
         கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
         உண்பதூஉம் இன்றிக் கெடும்.


பிறர்க்குத் உதவியாகக் கொடுக்கப்படும் பொருளைக் கண்டு  பொறாமைப்படுகின்றவனுடைய   சுற்றம்,  உடையும் உணவும் இல்லாமல் போய்விடும்.
167.    
          அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
           தவ்வையைக் காட்டி விடும்.


பொறாமை உடையவனைத் திருமகள் கண்டு பொறாமைப்பட்டுத்தன தமக்கைக்கு அவனைக் காட்டி நீங்கி விடுவாள்.
168.   
          அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
           தீயுழி உய்த்து விடும்.
 பொறாமை என்று   கூறப்படும்  ஒப்பற்ற பாவி ஒருவனுடைய  செல்வத்தையும் கெடுத்துத்  தீய வழியில் அவனைச் செலுத்தி விடும்.
169.   
       அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
       கேடும் நினைக்கப் படும்.


பொறாமை பொருந்திய நெஞ்சத்தானுடைய ஆக்கமும், பொறாமை இல்லாத நல்லவனுடைய கேடும் ஆராயத் தக்கவை.
  
170.  
       அழுக்கற்று அகன்றாரும் இல்லைஅஃது இல்லார்
       பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்.
பொறாமைப்பட்டுப்  பெருமையுற்றவரும் உலகத்தில் இல்லை;  பொறாமை இல்லாதவராய் மேம்பாட்டிலிருந்து நீங்கியவரும்  இல்லை.